

மதுரை மாவட்டத்தில் 2 பேர் உயிரிழப்புகளை தாண்டி, நடப்பாண்டு பாரம்பரிய அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் சட்டம், ஒழுங்கு பிரச்சனையில்லாமல் வெற்றிகரமாக நடந்துள்ளது. அதனால், கடந்த ஒரு மாதமாக இரவு, பகலாக இந்த போட்டிகளுக்காக பணியாற்றிய உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட அரசு அதிகாரிகள் முதல் கீழ்நிலை ஊழியர்கள் வரை நிம்மதியடைந்துள்ளனர்.
பொங்கல் பண்டிகை என்றாலே தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள்தான், எல்லோருக்கும் நினைவுக்கு வரும். அந்தளவுக்கு பொங்கல் பண்டிகையையும், ஜல்லிக்கட்டையும் தென் மாவட்ட மக்கள் பிரித்துப்பார்க்க மாட்டார்கள். அதனால், ஜல்லிக்கட்டு போட்டிகளை, திருவிழா போல் கொண்டாடுவார்கள். தற்போது நவீன காலத்திற்கு தகுந்தார்போல், கிரிக்கெட் மைதானம் போல் மதுரை அலங்காநல்லூர் கீழக்கரையில் பிரம்மாண்ட மைதானம் அமைக்கும் அளவிற்கு, ஜல்லிக்கட்டு போட்டிகள், மதுரையை தாண்டி உலகளவில் பிரபலமடைந்துள்ளது.
கடந்த காலத்தில் தற்போது போல் கார், டிராக்டர், பைக், தங்க காசுகள் போன்ற விலை உயர்ந்த பரிசுப்பொருட்கள் வழங்கப்படவில்லை. ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு இந்த போட்டிகளுக்கு ஏற்பட்டுள்ள வரவேற்பால் வெற்றிப்பெறும் காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பிரம்மாண்ட பரிசுப்பொருட்கள் வழங்குவது அதிகரித்துள்ளது.
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய மூன்று ஜல்லிக்கட்ட போட்டிகளுக்கும் சேர்த்து பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் பரிசுப்பொருட்கள் வழங்கப்படுகின்றன. விழா ஏற்பாடுகளுக்கும் கோடிக்கணக்கில் செலவிடப்படுகிறது. இந்த செலவுகள் அனைத்திற்கும் வர்த்தக நிறுவனங்களிடம், மற்ற உலகளாவிய விளையாட்டு போட்டிகளைபோல் ஸ்பான்சர் பெறப்படுகிறது.
ஜல்லிக்கட்டு விழாக்களில் அவர்கள் நிறுவனம் பற்றி விழாக்குழு விளம்பரப்படுத்தப்படும். தமிழகம் முழுவதும் வளர்க்கப்படும் சிறந்த காளைகள், மாடுபிடி வீரர்கள், இந்த மூன்று ஜலங்லிக்கட்டு போட்டிகளிலும் பங்கேற்பார்கள். அதனால், இந்த போட்டிகளில் விறுவிறுப்பிற்கும், சுவாசியத்திற்கும், வீரத்திற்கும் பஞ்சமிருக்காது.
ஜல்லிக்கட்டு காளைகள் பக்கம், அதன் வளர்ப்பார்களை தவிர மற்றவர்கள் நெருங்க முடியாது. கொம்பால் குத்தி தூக்கி வீசிவிடும். அப்பேற்றப்பட்ட காளைகள் அருகே நெருங்குவது மட்டுமில்லாது அதன் திமில்களை பிடித்து அடக்கும் மாடுபிடி வீரர்களின் வீரம், ஜல்லிக்கட்டு போட்டிகளில் போற்றப்படுகிறது. அதற்காகவே அவர்களுக்கு தற்போது கிரிக்கெட் போன்ற பிற விளையாட்டுப்போட்டிகளை போல் கார், பைக் போன்ற பரிசுகள் வழங்கப்படுகிறது.
காளை வளர்ப்போர், மாடுபிடி வீரர்களுக்கு வெற்றியை தாண்டி, மதுரை ஜல்லிக்கட்டுகளில் பங்கேற்பதையே பெருமையாக கருதுவதால் உள்ளூரில் காளை வளர்க்கும் சாதாரண விவசாயிகள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் முதல், அரசியல் பின்னணிகள் கொண்ட விஐபிகள் வரை காளைகளை களம் இறக்குவதற்கு கடும் போட்டி ஏற்படும். அதனால், குலுக்கல் முறையில் அனைவர் வளர்க்கும் காளைகளுக்கு டோக்கன் வழங்கி திருப்திப்படுத்துவது முதல், காளைகளை ஒழுங்குப்படுத்தி வரிசையாக வாடிவாசலில் அவிழ்த்துவிட்டு, அந்த காளைகள் யாரையும் காயப்படுத்தாமல் சேகரப்பது வரை போட்டி ஏற்பட்டாளர்கள் முதல் காளை வளர்ப்போருக்கும் பெரும் சவாலாக இருக்கும். அதனால், ஆண்டுக்கு ஆண்டு இந்த போட்டிக்கான ஈர்ப்பும், மவுசும், எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
ஆனால், இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில், பார்வையாளர்களுக்கு டிக்கெட் வழங்குவது முதல், காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கு டோக்கன் வழங்குவது, பார்வையாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், வாடிவாசல் அமைப்பது, கேலரிகள் அமைப்பது, சுகாதார வசதிகளை மேம்படுத்துவது போன்ற பல்வேறு மேம்பாட்டுப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இதற்காக மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் தலைமையில், வருவாய்துறை, கால்நடை துறை, காவல்துறை ஆகிய பல்வேறு அரசு துறை அதிகாரிகள் இணைந்து கடந்த ஒரு மாதமாக பணியாற்றி வந்தனர். இந்த போட்டிகளில் ஏதாவது குளறுபடிகள், பிரச்சனைகள் ஏற்பட்டால், இரவு, பகல் பாராது பணியாற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் கடும் நெருக்கடி ஏற்படும். அதனால், போட்டிகள் நடக்கும் நாட்கள் நெருங்க நெருங்கவும், போட்டி நாட்களிலும் மக்கள் பிரதிநிதிகள், அரசு உயர் அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பதட்டத்திலே இருப்பார்கள்.
இந்நிலையில் நேற்றுடன் இந்த ஆண்டிற்கான தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. அவனியாபுரத்தில் ஒரு மாடுபிடி வீரர், அலங்காநல்லூரில் ஒரு பார்வையாளர் ஆகிய இருவர் உயிரிழப்புகள் ஏற்பட்டாலும், மற்ற பெரிய பிரச்சனைகள், சட்டம், ஓழுங்கு சம்பவங்கள் ஏற்படாமல் இந்த ஆண்டிற்கான மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.