

மக்கள் பிரச்சினைக்காக அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி ஆதரவு திரட்டுவது சகஜம் தான். ஆனால், விழுப்புரம் மாவட்ட அரசியல்வாதிகள் மழை வெள்ளத்தை வைத்தும் ‘தொலைநோக்கு’ சிந்தனையுடன் போராட்டம் நடத்தி இருப்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
நவம்பர் 30-ம் தேதி தொடங்கி டிசம்பர் 3-ம் தேதி வரை அடித்த பேய்மழைக்கு யாரும் எதிர்பாராத விதமாக இம்முறை விழுப்புரம் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஃபெஞ்சல் புயலின் போது மாவட்டம் முழுமைக்கும் சராசரியாக 55 சென்டிமீட்டர் மழை பெய்தது. விழுப்புரம் நகரில் மட்டுமே 63.5 சென்டிமீட்டர் அளவுக்கு மழை கொட்டியது. இதனால் பாதிப்பும் அதிகம் ஏற்பட்டது. இதையடுத்து வெள்ள நிவாரணம் கேட்டு ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்தன. அமைச்சர்கள் வந்து பார்க்கவில்லை என ஆதங்கப்பட்டனர் மக்கள். களக்கத்துக்குச் சென்ற அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வாரி இறைத்தும் சிலர் அரசியல் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2000 மற்றும் 5 கிலோ அரிசி, சர்க்கரை மற்றும் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை நிவாரணமாக வழங்க உத்தரவிட்டது அரசு. அதன்படி 1,16,396 குடும்ப அட்டைதாரர்களுக்கு இவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனபோதும், வெள்ள நிவாரணம் கேட்டு மாவட்டத்தின் பல பகுதிகளில் தினமும் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடந்த வண்ணம் இருந்தன. ஆனால், இந்தப் போராட்டங்கள் அனைத்துமே ஜனவரி 6-ம் தேதி வரை தான் நீடித்தது.
தமிழகத்தில் (புதிதாக உருவான மயிலாடுதுறை மாவட்டத்தையும் சேர்த்து) 28 மாவட்டங்களைச் சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் ஜனவரி 5-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து. இந்த மாவட்டங்களின் உள்ளாட்சி நிர்வாகங்களை கவனிக்க தனி அலுவலர்களை நியமித்து ஜனவரி 7-ம் தேதி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. அத்துடன் போராட்டங்களை மறந்து அமைதிக்கு திரும்பிவிட்டார்கள் மக்கள். டிசம்பர் கடைசியில் தொடங்கி ஜனவரி 6-ம் தேதி வரை விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ள நிவாரணம் கோரி சுமார் 80 சாலைமறியல்கள், 10-க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஆனால், 7-ம் தேதிக்குப் பிறகு எந்தப் போராட்டமும் இல்லை.
போராட்டம் நின்று போனதன் சூட்சுமத்தை விளக்கிய விழுப்புரம் மாவட்ட அதிகாரிகள் சிலர், “2019-ல் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களின் பதவிக்காலம் ஜனவரி 5-ம் தேதியுடன் முடிவுக்கு வந்துவிட்டது. இதில்லாமல் மாவட்டப் பிரிவினைக்கு உள்ளான மற்றும் புதிதாக உருவான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் 2021-ல் தான் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
இந்த நிலையில், தற்போது தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடக்க இருப்பதாகவும் அதற்காக, 2021-ல் தேர்தலை சந்தித்த மாவட்டங்களின் உள்ளாட்சி நிர்வாகங்கள் கலைக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இதை வைத்து விழுப்புரம் உள்ளிட்ட அந்த 9 மாவட்டத்து அரசியல்வாதிகளும் உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாரானார்கள்.
விழுப்புரம் மாவட்டத்தில் ஒருசில இடங்களில் உண்மையாகவே வெள்ளத்தில் தத்தளித்த மக்கள் போராட்டங்களை நடத்தியது உண்மை. அதேசமயம், பெரும்பாலான இடங்களில் உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாரான அரசியல்வாதிகள் இந்தப் பிரச்சினையை ஆயுதமாக எடுத்து மக்களை திரட்டி போராட்டத்தில் குதித்தார்கள். ஆனால், மயிலாடுதுறை உள்ளிட்ட 28 மாவட்டங்களின் உள்ளாட்சி அமைப்புகளை கவனிக்க தனி அலுவலகர்களை நியமித்து அரசு, ஆணை பிறப்பித்துவிட்டதால் இப்போதைக்கு உள்ளாட்சித் தேர்தல் வர வாய்ப்பில்லை என தெளிவாகி விட்டது. அப்படி இருக்கையில் காசை செலவழித்து போராட்டம் நடத்துவது வீண் வேலை என்று தெரிந்து போனதால் இதுவரை போராட்டத்தை முன்னெடுத்து வந்த அரசியல்வாதிகள் அப்படியே அமைதியாகி விட்டார்கள். மக்களும் சைலன்ட் ஆகிவிட்டார்கள்” என்றனர்.
எப்டி எல்லாம் யோசிக்கிறாங்க!