

காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை பிரதானமாக வைத்து அந்தக் கட்சியிலிருந்து வெளியேறி கடந்த பிப்ரவரியில் பாஜக-வில் இணைந்தார் விளவங்கோடு தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ-வான விஜயதரணி. தற்போது பாஜக-விலும் அதே நிலை இருப்பதாக முணுமுணுப்பு கிளம்பி இருக்கும் நிலையில் விஜயதரணியிடம் பேசினோம்.
காங்கிரஸ் கட்சியில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று சொல்லி பாஜக-வில் இணைந்தீர்கள். இப்போது உரிய அங்கீகாரம் கிடைத்துவிட்டதா?
விரைவில் எனக்கான அங்கீகாரம் பாஜக-வில் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
ஆனால், கமலாலயத்தில் விஜயதரணியை பார்க்க முடியவில்லையே?
அழைப்பு வரும்போது கமலாலயம் செல்வேன்.
பேரிடர் நிவாரணம் உள்ளிட்ட விஷயங்களில் தமிழகத்துக்கான நிதியை மத்திய அரசு தரமறுப்பது நியாயம் தானா?
பேரிடர் நிவாரண நிதியை மத்திய அரசு தர மறுக்கிறது எனச் சொல்ல முடியாது. சரியான அளவீடுகளோடும், குறியீடுகளோடும் அதற்கான நிதியை கோரினால் மத்திய அரசு வழங்கும். அந்த நிதி போதவில்லை என்றால், அதற்குண்டான ஆதாரங்களைக் கொடுத்து, மேற்கொண்டு நிதியை பெறமுடியும். அதற்கு சட்டத்திலேயே இடம் இருக்கிறது. ஆனால், இதையெல்லாம் தமிழக அரசு முறையாக செய்வதில்லையே?
மத்திய அரசு நிதி தராததால் பொங்கல் பரிசைக் கூட தமிழக மக்களுக்கு தர முடியவில்லை என்கிறதே தமிழக அரசு... இதெல்லாம் பாஜக-வுக்கு பாதிப்பை உண்டாக்காதா?
பொங்கல் பரிசு என்பது தமிழக அரசின் சிறப்புத் திட்டம். இதுவரை பொங்கல் பரிசுக்கென மத்திய அரசிடம் இருந்து தான் தமிழக அரசு நிதி பெற்றதா என்ன? தமிழக அரசு முதலில் அதனை தெளிவுப்படுத்த வேண்டும்.
பாஜக கூட்டணியை தவிர்ப்பதால் தான் பழனிசாமிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனைகள் நடப்பதாகச் சொல்கிறார்களே..?
வருமான வரித்துறை அவர்களது பணியை செய்கிறார்கள். வருமான வரித்துறை சோதனையெல்லாம், சட்டத்துக்குட்பட்டது. இதில் சிக்கியவர்கள் பலரும் சட்டரீதியான தீர்வை பெற்றிருக்கிறார்கள். எனவே, அவரும் சட்டரீதியான தீர்வை பெற்றுக்கொள்ளட்டும்.
தமிழக பாஜக-வில் அண்ணாமலை ஒரு பக்கமும் மற்றவர்கள் எல்லாம் இன்னொரு பக்கமும் இருப்பது போன்ற ஒரு தோற்றம் இருக்கிறதே?
அப்படி எதுவும் கிடையாது. இவையெல்லாம், எதிர்க்கட்சிகள் உருவாக்கும் பிம்பம் தான்.
யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம் என முதல்வர் சொன்ன பிறகும் அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தை எதிர்க்கட்சிகள் இன்னமும் விடாமல் தொங்குவது மலிவு அரசியல் இல்லையா?
பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். அதற்காக, அந்த விவகாரத்தில் அரசியல் செய்தாலும் தவறில்லை. பல விஷயங்களுக்காக அரசியல் செய்யக்கூடிய கட்சிகள், பெண்களின் பாதுகாப்புக்காகவும் அரசியல் செய்யட்டுமே. அதில் என்ன தவறு இருக்கப் போகிறது?
சமூக பதற்றத்தை உருவாக்குவதற்காக சீமான் போன்றவர்களை ஆர்எஸ்எஸ் தூண்டிவிடுவதாகச் சொல்கிறார்களே..?
சீமான் அனைவரையும் விமர்சிக்கக்கூடியவர். அவர் பாஜக-வையும் பலமுறை விமர்சனம் செய்திருக்கிறார். எனவே, சீமான் பேசுவதற்கு யாருடைய பின்புலமும் தேவையில்லை. ஏனென்றால் பேசுவதற்கு அவரிடமே நிறைய தகவல்கள் இருக்கிறது.
திமுக கூட்டணிக் கட்சிகள் எல்லால் அரசை விமர்சிக்கும் நிலையில் காங்கிரஸ் அடக்கி வாசிப்பது ஏன்?
காங்கிரஸ் அவர்களது இடத்தை எப்போதோ திமுக-வுக்கு விட்டுக் கொடுத்துவிட்டார்கள். அதனால், தான் அனைத்துக்கும் அமைதி காக்கிறார்கள். இதனால் தான் காங்கிரஸ் மேலும் மேலும் குன்றிக் கொண்டே செல்கிறது.
அண்ணாமலையை மாற்றினால் 2026-ல் கூட்டணிக்கு அதிமுக சம்மதிக்கும் என நினைக்கிறீர்களா?
தேசிய கட்சிகளை பொறுத்தவரை கூட்டணியை மேலிடம் தான் முடிவு செய்யும். கூட்டணி அமைவதற்கான நேரம் இன்னும் இருக்கிறது. தேர்தல் நெருங்கும் போது தான் கூட்டணிகள் அமையும். அதனால், அதைப்பற்றி இப்போதே ஆலோசிக்க வேண்டிய அவசியம் இல்லை.
துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போன்றவர்கள் மீதுள்ள பழைய வழக்குகளை எல்லாம் தோண்டி எடுத்து இப்போது அமலாக்கத்துறை சோதனைகள் நடத்துவது பழிவாங்கல் நடவடிக்கை இல்லையா?
தன்னிச்சையாக இயங்கக்கூடிய துறைகள் அவர்களது பணிகளை செய்து வருகிறார்கள். இதில் எந்த வகையிலும் கட்சிகளின் தலையீடு இருக்காது. காங்கிரஸ் ஆட்சியின் போது கூட இது போன்ற சோதனைகள் கூட்டணி கட்சிகள் மீதே நடந்ததே.
இந்தச் சோதனைகள் நடந்த அன்று துரைமுருகன் அவசர அவசரமாக டெல்லி சென்றது ஏன் என உங்களால் அனுமானிக்க முடிகிறதா?
தன்னுடைய துறையின் கோரிக்கைகளை மத்திய அரசிடம் வழங்குவதற்காகவும், தனது தனிப்பட்ட பணிகளுக்காகவும் டெல்லி செல்வதாக அவரே சொல்லிவிட்டுத் தான் சென்றார்.
தமிழக பாஜக-வில் பெண்களுக்கான முக்கியத்துவம் இல்லை என்கிறார்களே..?
வரும் காலங்களில் பாஜக-வில் பெண்களுக்கு முக்கியத்துவம் அதிகரிக்கும் என்ற வாக்குறுதியை அளித்திருக்கிறார்கள். நிச்சயம் அதற்குண்டான நடைமுறைகள் பின்பற்றப்படும் என நம்புகிறேன்.