இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு அரசியல் தலைவர்கள் பாராட்டு

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு அரசியல் தலைவர்கள் பாராட்டு
Updated on
1 min read

செயற்கைக்கோள்களை விண்வெளியில் ஒருங்கிணைக்கும் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து விண்வெளியில் செயற்கைக்கோள்களை ஒருங்கிணைக்கும் தொழில்நுட்பத்தில் வெற்றிபெற்று இந்தியா சாதனை படைத்திருக்கிறது. இந்த வரலாற்று சிறப்புமிக்க ‘ஸ்பேடெக்ஸ்’ திட்ட செயல் விளக்கத்துக்காக இஸ்ரோ குழுவுக்கு மனமார்ந்த பாராட்டுகள். இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் இத்தருணத்தில், அதற்கு கடினமாக உழைத்த அனைத்து விஞ்ஞானிகளுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை: முதல்முறையாக செயற்கைக்கோள்களை விண்வெளியில் ஒருங்கிணைக்கும் முறையை இஸ்ரோ வெற்றிகரமாக செயல்படுத்தி இருப்பது மிகப்பெரிய மைல்கல்லாகும். இந்த தொழில்நுட்பம் நிலவுக்கு மனிதனை அனுப்பும் இந்தியாவின் எதிர்கால லட்சியத்துக்கு மிகவும் முக்கியமானது. இத்தகைய வரலாற்று சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: விண்வெளியில் செயற்கைக்கோள்களை ஒன்றிணைக்கும் பரிசோதனையை வெற்றிகரமாக செய்து முடித்திருக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள். ரஷ்யா, அமெரிக்கா, சீனாவைத் தொடர்ந்து விண்வெளியில் செயற்கைக்கோள் ஒருங்கிணைப்பு தொழில்நுட்பத்தை சாத்தியப்படுத்தி, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பெருமையைத் தேடித்தந்திருக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகளின் சாதனை பயணம் மென்மேலும் தொடரட்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in