Published : 16 Jan 2025 04:33 PM
Last Updated : 16 Jan 2025 04:33 PM

ஈரோடு வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: திமுக தலைமையை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ‘கலகக்குரல்’

செந்தில்குமார் (இடது), அமைச்சர் முத்துசாமி (வலது)

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக சந்திரகுமார் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து, ஈரோடு மாவட்ட திமுக துணைச்செயலாளர் செந்தில்குமார், சமூக வலைதளம் மூலம் எழுப்பிய, ‘கலகக்குரலால்’ திமுக தலைமை அதிர்ச்சியடைந்துள்ளது.

ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட முடிவு செய்த திமுக, காங்கிரஸ் டெல்லி தலைமையிடம் பேசி, தொகுதியைக் கேட்டுப் பெற்றது. இத்தொகுதி திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஈரோடு கிழக்கில் போட்டியிட விரும்பி, கடைசி கட்டம் வரை சென்ற மாவட்ட திமுக துணைச்செயலாளர் செந்தில்குமார்,கட்சித் தலைமையின் இந்த அறிவிப்பால் அதிருப்தி அடைந்தார். இதை வெளிப்படுத்தும் வகையில், ‘வீழ்வது நானாக இருப்பினும், வாழ்வது கழகமாக இருக்கட்டும்’ என்ற தலைப்பில், சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவு, திமுக வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

திமுக வேட்பாளர் சந்திரகுமார்

அவர் தனது பதிவில், ‘நான் எடுப்பார் கைப்பிள்ளையாக இருக்கமாட்டேன், எனக்கு வாய்ப்பு வழங்கி எம்எல்ஏ-ஆகிவிட்டால் கட்சியையும் கைப்பற்றி விடுவேன் என்று பயந்த சிலர் எனக்கு வரும் வாய்ப்பை தட்டி விட்டனர். துரோகங்களால் நான் வீழ்த்தப்பட்டுள்ளேன்’ என தனது மனக்குமுறலைக் கொட்டியுள்ளார்.

இந்த பதிவை அகற்றுமாறு அமைச்சர் முத்துசாமி உள்ளிட்டோர் வலியுறுத்தியும் செந்தில்குமார் அகற்றவில்லை. இந்த நிலையில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சந்திரகுமார், செந்தில்குமாரைச் சந்தித்து பேசினார். இதையடுத்து, ‘உறவுக்கு கைகொடுப்பேன். உரிமைக்கு கம்பீரக் குரல் கொடுப்பேன். கடமையை செய்வேன்’ என்று மறுபதிவினைப் போட்டுவிட்டு, தேர்தல் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு இருக்கிறார் செந்தில்குமார்.

இருப்பினும், அமைச்சர் முத்துசாமியின் அரசியல் விளையாட்டால்தான், இறுதிப் பட்டியலில் இடம் பெற்ற மூத்த நிர்வாகியான செந்தில்குமாரின் வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு திமுகவின் ஒரு பிரிவினிரிடையே தொடர்ந்து வருகிறது. இதுகுறித்து செந்தில்குமாரிடம் பேசியபோது, ‘நான் எதையும் மறுக்கவும் இல்லை; மறைக்கவும் இல்லை. கட்சி தலைமைக்கு, விசுவாசமாக இப்போது களப்பணியாற்றத் தொடங்கி விட்டேன்’ என்றார்.

ஈரோடு கிழக்கை மையப்படுத்தி எழுந்த இந்த ‘கலகக்குரல்’ மாநிலம் முழுவதும் செயல்படும் ‘ஒரிஜினல்’ திமுகவினரையும் உசுப்பி விட்டுள்ளது.

திமுகவில் அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் தலைமுறை நிர்வாகிகளைத் தொடர்ந்து தற்போது உதயநிதி ஆதரவு நிர்வாகிகள் தலையெடுக்கத் தொடங்கி விட்டனர். இதனால், கட்சிப்பதவிகள் தொடங்கி, கவுன்சிலர் முதல் அமைச்சர் வரையிலான பதவிகளை பிடிப்பதில் கடும் போட்டி ஏற்படுகிறது. இந்த போட்டிகளில், கட்சிக்காக உழைத்த, தொடர்ந்து திமுகவில் இருந்து உழைத்த ‘ஒரிஜினல்’ திமுகவினர் புறக்கணிக்கப்படுகின்றனர்.

அதிமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள், பண பலம் படைத்தவர்களுக்கு மட்டும் பதவி என்ற நிலை மாநிலம் முழுவதும் உள்ளது. இதனால், உண்மையான ‘உடன்பிறப்புகள்’ கடும் அதிருப்தியில் உள்ளனர். இதற்கு ஒரு சான்றுதான், ஈரோடு கிழக்கில் செந்தில்குமார் எழுப்பிய குரலாக அமைந்துள்ளது.

அடுத்த ஆண்டு வரும் சட்டசபை பொதுத்தேர்தலில், தங்களுக்கான வாய்ப்பை கட்சித்தலைமை உறுதி செய்யாவிட்டால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மூத்த நிர்வாகிகள் கலகக் குரல் எழுப்புவதைத் தவிர்க்க முடியாத நிலை ஏற்படும். பெரியார் மண்ணில் இருந்து திமுக தலைமைக்கு இந்த சேதி சொல்லப்பட்டுள்ளது. இதை தலைமை உணர்ந்து செயல்பட வேண்டும் என மூத்த திமுக நிர்வாகிகள் கூறுகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x