கருணாநிதி அறக்கட்டளை சார்பில் ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

கருணாநிதி அறக்கட்டளை சார்பில் ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
Updated on
1 min read

சென்னை: கருணாநிதி அறக்கட்டளை சார்பில், நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா ரூபாய் 25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சத்தை ஜன.16ம் தேதி அன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார், என்று அக்கட்சியின் தலைமைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கருணாநிதி அறக்கட்டளைக்காக, மறைந்த முதல்வர் கருணாநிதி தனது சொந்த பொறுப்பில் அளித்த ஐந்து கோடி ரூபாய் வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டு, அதில் கிடைக்கப்பெறும் வட்டித் தொகையினைக் கொண்டு, மாதந்தோறும் ஏழை எளிய நலிந்தோர்க்கு உதவித் தொகையாக 2005 நவம்பர் மாதம் முதல் 2007 ஜனவரி மாதம் வரை வழங்கப்பட்டு வருகிறது.

வைப்பு நிதியாக போடப்பட்ட ஐந்து கோடி ரூபாயில், 30-வது புத்தகக் கண்காட்சியினை 10.1.2007 அன்று திறந்து வைத்து கருணாநிதி பேசுகையில், கருணாநிதி அறக்கட்டளை சார்பில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்-பதிப்பாளர் சங்கத்துக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்து அச்சங்கத்துக்கு வழங்கியது போக மீதமுள்ள நான்கு கோடி ரூபாயிலிருந்து வரும் வட்டித் தொகையில் 2007 பிப்ரவரி முதல் தொடர்ந்து
உதவித் தொகை வழங்கப்படுகிறது.

2005 நவம்பர் முதல் இதுவரை வழங்கிய நிதி ரூ.6 கோடியே 15 லட்சத்து 90 ஆயிரம். இந்த மாதம் நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா ரூபாய் 25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2,00,000 (இரண்டு லட்சம்) ஜன.16-ம் தேதி அன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.நிதி பெறுவோர் வெளி மாவட்டங்களிலிருந்து வந்துபோகிற செலவினத்தை தவிர்ப்பதற்காக தபால் மூலம் வரைவுக் காசோலையாக அனுப்பப்படுகிறது, என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in