Published : 16 Jan 2025 03:58 PM
Last Updated : 16 Jan 2025 03:58 PM

நெல்லை கல்லூரி மாணவி சந்தேக மரணம்: சிபிசிஐடி விசாரணைக்கு மார்க்சிஸ்ட் கம்யூ. வலியுறுத்தல்

பெ.சண்முகம் | கோப்புப்படம்

சென்னை: திருநெல்வேலி விவசாயக் கல்லூரி மாணவி மரணம் சந்தேகத்துக்கிடமானது என்று கருத அனைத்து வாய்ப்புகளும் உள்ளது. மேலும், காவல்துறையின் அணுகுமுறையும் பாரபட்சமானதாக உள்ளது. எனவே, இவ்வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு மாற்ற வேண்டும்.மாணவியின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த மாணவி ஒருவர் சிவகங்கை மாவட்டம் விசாலன்கோட்டை சேது பாஸ்கரா விவசாயக் கல்லூரியில் பிஎஸ்சி அக்ரி மூன்றாமண்டு படித்து வந்தார்.

ஜன.7ம் தேதி அன்று காலை 9.15 மணியளவில் கல்லூரி விடுதி வார்டன் கோகிலா என்பவர், மாணவியின் தந்தையை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மாணவி கல்லூரி விடுதி மாடியில் இருந்து கீழே விழுந்து சுயநினைவு இல்லாமல் கிடந்ததாகவும், ஆயா சந்திரா என்பவரும், மாணவி தாட்சாயினி என்பவரும் பார்த்து தகவல் தெரிவித்தனர் என்றும், பின்பு அவரை காரைக்குடி குளோபல் மருத்துவனையில் சேர்த்து, பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை மீனாட்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாகவும், மீனாட்சி மருத்துவமனைக்கு வந்து விடுமாறு தகவல் தெரிவித்துள்ளார்.

மாணவியின் தந்தை பதறி அடித்து, மதுரை மீனாட்சி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு மாணவி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். மறுநாள் ஜன.8-ம் தேதி அன்று பிற்பகல் 2.45 மணிக்கு மாணவி இறந்து விட்டதாக மருத்துவர்கள் செல்வகுமாரிடம் தகவல் தெரிவித்து உள்ளனர்.

போலீஸார் சொன்ன அடிப்படையில் செல்வகுமார் புகார் ஒன்றை எழுதி கொடுத்துள்ளார். இதன்பேரில் சிவகங்கை மாவட்டம் கல்லல் காவல் நிலையத்தில், 194 பிஎன்எஸ் பிரிவின் கீழ், வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இச்சம்பவம் குறித்து பெற்றோரும், ஊர்மக்களும் கீழ்க்கண்ட சந்தேகங்களை எழுப்பியுள்ளனர்.

  • மாடியில் இருந்து மாணவி கீழே விழுந்தது குறித்து கல்லூரி நிர்வாகம் ஏன் புகார் கொடுக்கவில்லை ?
  • மொட்டை மாடிக்கு செல்லும் கதவு எப்போதும் பூட்டப்பட்டிருக்கும். மாணவி மாடிக்கு செல்லும் கதவை எப்படி திறந்தார். அவருக்கு சாவி எப்படி கிடைத்தது ?
  • விடுதியில் ஏன் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்படவில்லை ?
  • கீழே விழுந்த மாணவியை கல்லூரி வாகனத்தில் காரைக்குடி மருத்துவமனைக்கு கொண்டு சென்றது ஏன்? ஆம்புலன்சுக்கு ஏன் தகவல் சொல்லவில்லை ?
  • மதுரை மீனாட்சி மருத்துவமனைக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் ஏன் யாரும் வரவில்லை ?, பெற்றோரை ஏன் சந்திக்கவில்லை ?
  • விசாரணை முடியும் முன்னரே, மாணவியின் அம்மா திட்டுவார் அதனால் தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸார் கூறியது ஏன் ?
  • மாணவியின் தந்தையிடம் ஏன் போலீஸார் கட்டாயப்படுத்தி புகாரை எழுதி வாங்கினர் ?

மேற்கண்ட சூழலில் மாணவியின் மரணம் சந்தேகத்துக்கிடமானது என்று கருத அனைத்து வாய்ப்புகளும் உள்ளது. மேலும், காவல்துறையின் அணுகுமுறையும் பாரபட்சமானதாக உள்ளது. எனவே, இவ்வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனவும், மாணவியின் குடும்பத்துக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x