Published : 16 Jan 2025 01:58 AM
Last Updated : 16 Jan 2025 01:58 AM

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நாதக வேட்பாளர் அறிவிப்பு: யார் இந்த சீதாலட்சுமி?

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக மா.கி.சீதாலட்சுமி போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவுக்கு பின்னர், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியில் வரும் பிப்.5-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையொட்டி வேட்புமனுத்தாக்கல் நடைபெற்று வரும் நிலையில், இண்டியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் நிறுத்தப்பட்டுள்ளார். அதேநேரம் அதிமுக, பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகள் இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் தமிழர் கட்சி ஈரோடு சட்டப்பேரவை தொகுதிக்கான வேட்பாளரை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில்,“ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில், முதுகலை ஆய்வியல் நிறைஞர் மா.கி.சீதாலட்சுமி போட்டியிடுவார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட மற்றும் அனைத்து நிலைப் பொறுப்பாளர்களும் ஈரோடு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.” என்று தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி, கோபி கலைக் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் மற்றும் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆய்வியல் பட்டம் பெற்றவர். 13 ஆண்டுகள் ஆசியராகவும் பணியாற்றியிருக்கிறார். தற்போது விவசாயத்தில் ஈடுபட்டு வருவதுடன், கேபிள் டிவி உதவியாளராகவும் பணியாற்றி வருகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x