

பொள்ளாச்சியில் நடைபெற்ற வெப்பக் காற்று பலூன் திருவிழாவில் 8 ராட்சத பலூன்கள் பறக்கவிடப்பட்டன.
தமிழக சுற்றுலா வளர்ச்சி துறை சார்பில் 10-வது ஆண்டாக சர்வதேச வெப்பக் காற்று பலூன் திருவிழா பொள்ளாச்சி ஆச்சிப்பட்டி மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதுகுறித்து விழா ஏற்பாட்டாளர்கள் கூறியதாவது:
பிரேசில், பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்திரியா, பெல்ஜியம், ஜப்பான், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட பேபி மான்ஸ்டர், ஹயூகோ தி சீட்டா, வெஸ் தி வுல்ப், எலிபென்ட் உள்ளிட்ட பல்வேறு வடிவிலான 8 ராட்சத பலூன்கள் பறக்கவிடப்பட்டன. சுமார் 60 அடி முதல் 100 அடி வரை உயரம் கொண்ட ராட்சத பலூன்கள் தங்கள் வீடுகளுக்கு மேல் பறந்து சென்றதை, அப்பகுதி மக்கள் வியப்புடன் கண்டு மகிழ்ந்தனர்.
சர்வதேச பலூன் திருவிழாவைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மட்டுமின்றி, அண்டை மாநிலமான கேரளாவிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர். சுமார் 1,000 அடி உயரத்துக்கு மேல் பறந்து செல்லும்போது, பொள்ளாச்சியின் அழகான நிலப்பரப்பை கழுகுப் பார்வையில் பார்க்க முடியும். பாலக்காட்டு கணவாய் பகுதியில் அமைந்துள்ள பொள்ளாச்சியில் காற்றின் வேகம், தட்பவெப்பம் ஆகியவை இந்த விழா நடத்த ஏதுவாக அமைந்துள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் பறக்கவிடப்பட்ட யானை வடிவ வெப்பக் காற்று பலூன் ஆச்சிப்பட்டியில் இருந்து 4 பேருடன் 1,000 அடி உயரத்தில் பறந்து சென்றது. வழக்கம்போல் 6 கி.மீ. தொலைவுக்குள் தரை இறங்க வேண்டிய வெப்பக் காற்று பலூன், காற்றின் வேகத்தால் 20 கி.மீ. பயணித்து, கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கன்னிமாரி அருகேயுள்ள முள்ளந்தோடு என்னும் இடத்தில் நெல் வயலில் தரையிறங்கியது. பலூனில் இருந்த 4 பேரையும் அப்பகுதி மக்கள் பத்திரமாக மீட்டனர். வெப்பக்காற்று பலூன் திருவிழா இன்றுடன் நிறைவடைகிறது.