Published : 14 Jan 2025 01:44 AM
Last Updated : 14 Jan 2025 01:44 AM
பொங்கல் விழாவையொட்டி மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று காலை கோலாகலமாக நடக்கிறது. இதில் சிறந்த மாடுபிடி வீரர், பிடிபடாத காளைக்கு கார், டிராக்டர் பரிசு வழங்கப்படுகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் மதுரை மாவட்டம், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் கிராமங்களில் பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக நடைபெறும். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜன.14) நடக்கிறது. இந்த போட்டிக்கு 2,026 காளைகள், 1,735 மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்திருந்தனர். இவர்களில் போட்டிகளில் பங்கேற்க உள்ள சிறந்த காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு நேற்று ‘டோக்கன்கள்’ வழங்கப்பட்டது.
விழா மேடை, பார்வையாளர் கேலரி, தடுப்பு வேலிகள், சோதனை மையம், சிசிடிவி கேமரா, வாடிவாசல் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இன்று காலை 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது. அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் போட்டியை தொடங்கி வைக்கின்றனர். இரவு 7 மணி வரை ஒவ்வொரு சுற்றிலும் 50 காளைகள் களத்தில் அவிழ்த்து விடப்படும்.
காளைகளை அழைத்து வருவோர், மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்ட அனுமதி டோக்கன், காளை உரிமையாளர்களின் ஆதார் அட்டையை கண்டிப்பாக கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு சுற்றிலும் சிறந்த மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் இறுதிச் சுற்றில் பங்கேற்பர். மது அருந்திவிட்டு வரும் வீரர்கள் உடனடியாக போட்டியில் இருந்து விலக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போட்டி நேரத்தை நீட்டிப்பது தொடர்பாக களத்தின் நிலையை பொறுத்து மாவட்ட நிர்வாகம் முடிவு செய்யும். ஆள்மாறாட்ட முறைகேட்டை தடுக்கும் வகையில் காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் கியூ ஆர் கோடுடன் கூடிய அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. போட்டியில் காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்களுக்கு தங்கம், வெள்ளிக் காசுகள், மிக்ஸி, ஃபேன், கிரைண்டர், குக்கர், கட்டில், சைக்கிள் உள்ளிட்ட ஏராளமான பரிசு பொருட்கள் வழங்கப்படுகின்றன. சிறந்த காளை, மாடுபிடி வீரர்களுக்கு விலையுயர்ந்த கார், டிராக்டர் பரிசு வழங்கப்படுகிறது.
காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு காயம் ஏற்படாமல் இருக்க வாடிவாசல் முன் 200 மீட்டருக்கு தேங்காய் நார் பரப்பப்பட்டு பிரத்யேக ஜல்லிக்கட்டு விளையாட்டுத் திடல் அமைக்கப்பட்டுள்ளது. போட்டியை பார்வையிட ஆயிரக்கணக்கானோர் வருவர். அவர்களுக்கு கேலரி, பாதுகாப்பு வசதி, குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளது. போட்டியை கண்காணிக்கவும், பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா தலைமையில் 2,500 போலீஸார் அவனியாபுரத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். போட்டிக்கான ஏற்பாடுகளை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT