Published : 14 Jan 2025 01:33 AM
Last Updated : 14 Jan 2025 01:33 AM
ஓசூர்: சமூக ஏற்றத்தாழ்வுகளைக் களைய வள்ளலார் வழியை அனைவரும் பின்பற்ற வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வள்ளலாரின் விவேகம் அறக்கட்டளை சார்பில் 5-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் ஜீவகாருண்ய விருதுகள் வழங்கும் விழா நேற்று நடந்தது.
இதில், ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் ஜீயர்கள், மடாதிபதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழா தொடக்கத்தில் தேசியகீதம் பாடப்பட்ட பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
தொடர்ந்து, ஆன்மிக தொண்டாற்றியவர்களுக்கு ஜீவகாருண்ய விருதுகளை ஆளுநர் வழங்கி பேசியதாவது: ஒவ்வொரு உயிரும் சமம் பாரதத்தில் அதர்மம் தலைதூக்கும்போது ஞானிகள் மக்களைக் காப்பாற்றினர். அவர்களைப் போலத்தான் வள்ளலார் அவதரித்து, அனைவரையும் காப்பாற்றினார். மேலும், சனாதனம் தருமம், ஒவ்வொரு உயிரும் சமம் என்று போதித்தார் வள்ளலார். இதை நான் தமிழகம் வரும் முன்னரே வள்ளலாரின் எழுத்து, வழிபாடுகள் குறித்து அறிந்து, அதைப் பின்பற்றி ஆளுநர் மாளிகையில் வள்ளலாருக்குச் சிலை வைத்து வழிபட்டு வருகிறேன்.
தீண்டாமையை ஒழிக்கவும், உயர் சாதி, கீழ் சாதி என்ற நிலையை நீக்கவும், தங்களால் முடிந்த உதவிகளை அடுத்தவருக்குச் செய்ய வேண்டும் என்று வள்ளலார் பாடுபட்டார். இதையே விவேகானந்தரும் வலியுறுத்தினார். நம் நாட்டை ஆண்ட ஆங்கிலேயர்கள் அவர்களது கலச்சாரத்தைக் கொண்டு வந்தனர். அப்போது பள்ளிகளில்ஆங்கில வழியில் கல்வி கற்றுக்கொடுத்தார்கள். இதற்கு வள்ளலார் எதிர்ப்பு தெரிவித்து சமஸ்கிருதம் மற்றும் தமிழில் கல்வி கற்க வலியுறுத்தினார்.
வள்ளலாரைப் போன்ற ஞானிகள் வாழ்ந்த தமிழகம் ஒரு புண்ணிய பூமி. பல நூற்றாண்டுகளைக் கடந்த பின்னரும் சமூக நீதி ஏற்றத் தாழ்வுகளுடன்தான் உள்ளது. குறிப்பாக, சமூக நீதி பேசும் தமிழகத்தில் சமூக ஏற்றத்தாழ்வுகள் இன்னும் ஒழிக்கப்படவில்லை.
அனைவரும் வள்ளலார் வழியைப் பின்பற்றினால் அது முழுமையாக அகற்றப்படும் என்ற நம்பிக்கையுள்ளது. வள்ளலாரின் பக்தராகப் பிரதமர் நரேந்திர மோடி நமக்குக் கிடைத்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT