ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா - டிஜிபி சங்கர் ஜிவால் பங்கேற்பு

சமத்துவ பொங்கல் விழாவில் டிஜிபி சங்கர் ஜிவால் தன் துணைவியாருடன் பங்கேற்று, பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினார்.  
சமத்துவ பொங்கல் விழாவில் டிஜிபி சங்கர் ஜிவால் தன் துணைவியாருடன் பங்கேற்று, பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினார்.  
Updated on
1 min read

ஆவடி: ஆவடி காவல் ஆணையரகத்துக்கு கூடுதலாக 433 போலீஸார் விரைவில் நியமனம் செய்யப்பட்ட உள்ளனர் என தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், இன்று ஆவடி அடுத்த திருமுல்லைவாயிலில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் தெரிவித்தார்.

ஆவடி காவல் ஆணையரகம் சார்பில், ஆவடி அடுத்த திருமுல்லைவாயில், போலீஸ் கன்வென்சன் சென்டரில் சமத்துவ பொங்கல் விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது இதில், சிறப்பு விருந்தினர்களாக தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், ஆவடி காவல் ஆணையர் கமிஷனர் சங்கர் ஆகியோர் குடும்பத்துடன் பங்கேற்று, பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து, கயிறு இழுத்தல், உரி அடித்தல், மெதுவாக சைக்கிள் ஓட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய கலாச்சார போட்டிகள் மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில், காவல் துறை அதிகாரிகள் மற்றும் போலீஸார், அவர்களின் குடும்பத்தினர் பங்கேற்று அசத்தினர்.

கிளி ஜோசியம், 90’ ஸ் கிட்ஸ் மிட்டாய் அரங்குகள் மற்றும் பரமபதம் உள்ளிட்ட சிறுவர் விளையாட்டு அரங்குகள், இசை நிகழ்ச்சி என களைகட்டிய இவ்விழாவில், கடந்த ஆண்டு ஆவடி காவல் ஆணையரகத்தில் சிறப்பாக பணியாற்றிய 10 போலீஸாருக்கு ரொக்கப் பரிசுகள் மற்றும் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகளை டிஜிபி சங்கர் ஜிவால் வழங்கினார்.

விழாவில், டிஜிபி சங்கர் ஜிவால் பேசியது: ஆவடி காவல் ஆணையரகம் கடந்த ஓராண்டில் ரவுடிகளை ஒடுக்குதல், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்தல், தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் நடமாட்டத்தை தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை சிறப்பாக மேற்கொண்டுள்ளது. சில பணிகளில் தமிழக அளவில் முதலிடம் பெற்றுள்ளது. குறிப்பாக முதல்வரின் முகவரி திட்டத்தின் கீழ் வந்த மனுக்கள் மீது உரிய தீர்வு காணப்பட்டு மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளது.

ஆவடி காவல் ஆணையரகத்துக்கு கூடுதலாக 433 போலீஸார் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர். காவல்துறையினரின் நலன் கருதி, தற்போது வழங்கப்பட்டு வரும் சேமநல நிதியானது, ரூ.8 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

இவ்விழாவில் ஆவடி காவல் ஆணையரகத்தைச் சேர்ந்த உயரதிகாரிகள், போலீஸார், அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் என, ஏராளமானோர் பங்கேற்று, சமத்துவ பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in