Last Updated : 13 Jan, 2025 04:59 PM

 

Published : 13 Jan 2025 04:59 PM
Last Updated : 13 Jan 2025 04:59 PM

சாட்டை துரைமுருகனின் பிடிக்குள் சீமான்! - தூத்துக்குடி தெற்கு மாவட்ட நாதக நிர்வாகிகள் கூண்டோடு ‘குட்பை’

“தனித்துப் போட்டியிட்டு 36 லட்சம் வாக்குகளைப் பெற்று அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக வளர்ந்துள்ளோம்” என போகுமிடமெல்லாம் காலரை தூக்கிவிட்டு உற்சாகத்துடன் சொல்லி வருகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

ஆனால், அந்த உற்சாகத்துக்கு உலைவைக்கும் விதமாக நாதக-வில் இருந்து நிர்வாகிகள் மொத்தம் மொத்தமாக விலகிவருகிறார்கள். லேட்டஸ்ட்டாக, தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் சுப்பையா பாண்டியன் தலைமையில் 36 நிர்வாகிகள் கூண்டோடு குட்பை சொல்லி இருக்கிறார்கள்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய சுப்பையா பாண்டியன், “2009-ம் ஆண்டு முதல் நாதக-வில் பயணம் செய்துள்ளேன். 2016, 2021 சட்டப்​பேரவை தேர்தல்​களில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டி​யிட்​டுள்​ளேன். அப்படிப்பட்ட நானும் எனது ஆதரவாளர்​களும் கட்சியி​லிருந்து விலகும் முடிவை எடுக்கக் காரணம் சாட்டை துரைமுருகன் தான். சாட்டை துரைமுருகன் கட்சிக்குள் தனக்கென ஒரு ஆதரவு வட்டத்தை உருவாக்கி வருகிறார்.

நாங்களெல்லாம் சாட்டை துரைமுரு​க​னுக்கு சீனியர்கள். எங்களால் அவருக்கு வால் பிடிக்க முடியாது. சீமானின் விசுவாசி களாகத்தான் எங்களால் இயங்க முடியும். அதனால், சீனியர்களை கட்சியி​லிருந்து வெளியேற்ற சாட்டை துரைமுருகன் தந்திரமாக சில வேலைகளைப் பார்க்​கிறார். அதை ஏற்கமுடி​யாமல் தான் சீனியர்கள் தொடர்ச்​சியாக கட்சியில் இருந்து வெளியேறி வருகின்​றனர்.

எங்களை சீமானிடம் நெருங்​க​வி​டாதது மட்டுமின்றி அவரையே எங்களுக்கு எதிராக திருப்பி விடுகிறார் சாட்டை துரைமுருகன். இதையெல்லாம் சகிக்க முடியாமல் கடந்த 2 மாதமாக கட்சி நடவடிக்கை​களில் ஈடுபடாமல் அமைதியாக இருந்​தோம். இனிமேலும் அப்படியே இருக்க முடியாது என்பதால் தான் நானும் எனது ஆதரவாளர்களான 36 நிர்வாகி​களும் கூண்டோடு விலகி​விட்​டோம். இதில், மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டி​யிட்ட ரோவினா ரூத் ஜேனும் இருக்​கிறார். பொறுப்​பாளர்கள் தவிர, 150 நாதக தொண்டர்​களும் எங்களோடு விலகி​யுள்​ளனர்.

சுப்பையா பாண்டியன்

சட்டப்​பேரவை தேர்தல் நேரத்தில் பலபேர் எங்களை இழுக்க பேரம் பேசினார்கள். அப்போதெல்லாம் கொஞ்சமும் சலனப்படாத நாங்கள் இப்போது சாட்டை துரை முரு​கனால் சங்கடப்​பட்டு கட்சி​யை​விட்டு விலகி இருக்​கிறோம். பொருளாதார இழப்பை எல்லாம் தாங்கிக் கொண்டு இந்தக் கட்சிக்காக 15 ஆண்டுகள் உழைத்​திருக்​கிறோம். அதற்கான குறைந்​தபட்ச மரியாதைகூட எங்களுக்கு இல்லை. எங்களின் நிலையை தலைமைக்கு தெரிவிக்​கலாம் என்றால் சீமான் சுற்றுப்​பயணம் வரும்போது நிர்வாகிகளை சந்தித்துப் பேசுவ​தில்லை.

கலந்தாய்வு என அழைத்​தாலும் அவர் மட்டும் தான் பேசுவார். முடிவையும் அவர் தான் எடுப்​பார். குறைந்​த​பட்சம் எங்களது கருத்தைக் கூட கேட்ப​தில்லை. அப்படி கேட்டால் தானேகட்சிக்குள் இருக்கும் பிரச்சினைகளை கூறமுடி​யும். ஆரோக்​கியமான இந்த விவாதங்கள் எல்லாம் நடக்காத அளவுக்கு கட்சியை தனது கட்டுப்​பாட்டுக்குள் கொண்டு​போய்​விட்டார் சாட்டை துரைமுருகன்.

இனியும் இந்த நிலை மாறப்​போவ​தில்லை என்பதால் நாங்கள் நாதக-​விலிருந்து விலகி​விட்​டோம். அடுத்து என்ன செய்வது என்பது குறித்து ஆதரவாளர்​களுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன். விஜய் கட்சியில் சேருவது தொடர்பாக இதுவரை நாங்கள் முடிவெடுக்க​வில்லை. அந்தக் கட்சியி​லிருந்தும் யாரும் எங்களை அணுகவில்லை. விரைவில் நல்ல ​முடிவை எடுப்​போம்” என்​றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x