“தமிழகத்தின் தனித்துவமும் மகத்துவமும் இந்திய ஒன்றியத்தில் தொடர்ந்து மின்னிடும்” - முதல்வர் ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: “வெறும் கொண்டாட்ட நிகழ்வாக இருந்த பொங்கல் திருநாளை பண்பாட்டுப் படைக்கலனாகவுமே மாற்றிப் பண்படுத்திய இயக்கத்தின் வழிவந்த அரசு நமது அரசு. ஒற்றுமையோடும், வரலாற்று ஓர்மையோடும் நாம் ஒன்றிணைந்து நிற்கும் வரை தமிழகத்தின் தனித்துவமும் மகத்துவமும் இந்திய ஒன்றியத்தில் தொடர்ந்து மின்னிடும்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பண்டிகை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: முத்தமிழ், முச்சங்கம், முக்கனி, மூவேந்தர், முக்கொடி கொண்ட தமிழரின் தனிப்பெரும் பண்பாட்டு விழாவான பொங்கல் திருநாள் மூன்று நாட்களுக்குக் கொண்டாடப்படுகிறது. நானிலம் போற்றும் இந்த நன் நாளினை எழுச்சியோடு இந்தப் புத்தாண்டில் கொண்டாட எதிர்நோக்கியுள்ள உலகத் தமிழர் அனைவருக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்.

பொங்கல் விழா என்பது உழவை, உழைப்பை, சமத்துவத்தை, இயற்கையின் சிறப்பைப் போற்றும் விழா. தமிழரின் பண்பாட்டை, நாகரிகத்தை, வீரத்தைப் பறைசாற்றும் பெருவிழா. விளைச்சலின் இன்பத்தைப் பகிர்ந்துகொள்ளும் விழா. உற்றார், உறவினர், சுற்றம், நட்பு, ஊரார் உடன் கொண்டாடிக் களித்திடும் விழா.

பள்ளிக்கல்வி தொடங்கி உயர்கல்வி வரை, வேளாண் வளர்ச்சி முதல் தொழில்துறை வளர்ச்சி வரை, பள்ளி சிறார்களுக்கு காலை உணவு தொடங்கி அவர்தம் ஆற்றலையும் அறிவினையும் பெருக்கிட நான் முதல்வன் வரை, மகளிருக்கு உரிமைத்தொகை தொடங்கி மாணவக் கண்மணிகளுக்கு புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் வரை என மூன்றாண்டுகளில் துறைதோறும் துடித்தெழுந்துள்ளது தமிழகம். பத்தாண்டு காலமாக உறங்கியிருந்த தமிழகம், இன்றைக்கு வீறுநடை போட்டு, அனைத்துத் துறைகளிலும் உயர்ந்து நிற்கிறது.

எந்தப் பிரிவினரும் ஒதுக்கப்படவில்லை. எந்த மாவட்டமும் புறக்கணிக்கப்படவில்லை. எந்தத் துறையும் பின்தங்கி நிற்கவில்லை என்று நெஞ்சை நிமிர்த்திக் கூறும் அளவுக்குப் பரவலான, சமத்துவமான வளர்ச்சியை அடைந்து காட்டியிருக்கிறோம். நெருக்கடிகள் இல்லாமல் இல்லை; சோதனைகளை எதிர்கொள்ளாமல் இல்லை; இயற்கைப் பேரிடர்கள் தாக்காமல் இல்லை; பாரபட்சத்தால் பாதிக்கப்படாமல் இல்லை. அத்தனையையும் எதிர்கொண்டு சாதித்து வருகிறோம் என்பதுதான் நம் பெருமை. இன்றைக்கு மக்களின் பேராதரவோடு, கருத்தியல் களத்திலும், தேர்தல் களத்திலும் தொடர் வெற்றிகளைக் குவித்து, எதிரிகளின் கனவுகளைத் தவிடுபொடி ஆக்கி வருகிறோம்.

திராவிட மாடல் எனும் பாதுகாப்பு வளையம் அமைதி, சகோதரத்துவம், மதநல்லிணக்கம், முற்போக்குச் சிந்தனை, முன்னேற்றப் பாதை, கல்வி வளர்ச்சி எனத் தமிழகத்தை இந்திய அளவில் முன்னணி மாநிலமாக மாற்றி வருகிறது. வெறும் கொண்டாட்ட நிகழ்வாக இருந்த பொங்கல் திருநாளைப் பண்பாட்டுப் படைக்கலனாகவுமே மாற்றிப் பண்படுத்திய இயக்கத்தின் வழிவந்த அரசு நமது அரசு. ஒற்றுமையோடும், வரலாற்று ஓர்மையோடும் நாம் ஒன்றிணைந்து நிற்கும் வரை தமிழகத்தின் தனித்துவமும் மகத்துவமும் இந்திய ஒன்றியத்தில் தொடர்ந்து மின்னிடும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in