Published : 13 Jan 2025 06:25 AM
Last Updated : 13 Jan 2025 06:25 AM

பெருங்குடி குப்பை எரி உலை திட்டம் கைவிடாவிட்டால் போராட்டம்: அன்புமணி எச்சரிக்கை

சென்னை: பெருங்குடி குப்பை எரி உலை திட்டத்தை கைவிடாவிட்டால் மக்கள் திரள் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை பெருங்குடியில் உள்ள குப்பைக் கிடங்கில் குப்பையை எரித்து மின்சாரம் தயாரிக்கும் எரிஉலை அமைக்க முடிவு செய்திருக்கும் சென்னை மாநகராட்சி, அதற்கான ஆயத்த பணிகளை தொடங்கி இருக்கிறது. அருகில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கும், அப்பகுதியில் வாழும் லட்சக்கணக்கான மக்களுக்கும் பெரும் தீங்கை ஏற்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த திமுக அரசு துடிப்பது கண்டிக்கத்தக்கது.

சென்னை பெருங்குடியில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு மிக அருகில் 150 ஏக்கர் பரப்பளவில் குப்பை எரி உலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், இராம்சர் தலம் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் சூழலியல் மிகக்கடுமையாக பாதிக்கப்படும்.

சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்யும் அளவுக்கு அதிகமான மழை நீரை உறிஞ்சி வெள்ளம் ஏற்படாமல் தடுக்கும் பணியை பள்ளிக்கரணை சதுப்பு நிலம் தான் செய்கிறது. 115 வகையான பறவைகள், 10 வகையான பாலூட்டிகள், 9 ஊர்வன வகைகள், 46 வகை மீன்கள், 5 வகையான ஒட்டு மீன்கள், 9 வகையான மெல்லுடலிகள் போன்றவற்றின் வாழிடமாக பள்ளிக்கரணை சதுப்பு நிலம் திகழ்கிறது.

மக்களுக்​கு பெரும் தீங்கு: அதை ஒட்டிய பகுதிகளில் குப்பை எரி உலை அமைக்கப்பட்டால் அது பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கும், அப்பகுதியில் வாழும் லட்சக்கணக்கான மக்களுக்கும் பெரும் தீங்கை ஏற்படுத்தும். இத்திட்டத்தை செயல்படுத்த திமுக அரசு துடிப்பது கண்டிக்கத்தக்கது.

மேலை நாடுகளின் மக்கள் குப்பை எரி உலைகளை கடுமையாக எதிர்க்கின்றனர். அமெரிக்க நாட்டில் 1991-ம் ஆண்டில் 187 எரி உலைகள் இருந்தன. ஆனால், இப்போது வெறும் 77 எரி உலைகள் மட்டுமே உள்ளன. கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவின் 250 நகரங்களின் மேயர்கள் ஒன்று கூடி, தங்களது நகரங்களில் எரி உலை திட்டங்களை அனுமதிக்க மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இந்தியாவில் உருவாகும் குப்பை, எரி உலைகளுக்கு ஏற்றதாக இல்லாததால் லக்னோ, புனே, கான்பூர் உள்ளிட்ட பல இடங்களில் தொடங்கப்பட்ட எரி உலைகள் தோல்வியடைந்தன. அவை மூடப்பட்டுவிட்டன.

சாத்​தி​யமில்லை: சென்னை மாநகரிலும் குப்பையை எரித்து அதிலிருந்து மின்சாரம் எடுப்பது தொழில்நுட்ப ரீதியில் சாத்தியமற்றது ஆகும். சென்னையில் கிடைக்கும் குப்பைகளைக் கொண்டு குப்பை எரிஉலை அமைப்பது நடைமுறையில் சாத்தியமில்லை. குப்பையை வகை பிரிப்பது, மக்கும் கழிவுகளை மக்க வைப்பது, கழிவுகளை மறு சுழற்சிக்கு அனுப்புவது ஆகியவை தான் தீர்வு ஆகும். இதை உணர்ந்து பெருங்குடியில் குப்பை எரி உலை அமைக்கும் திட்டத்தை சென்னை மாநகராட்சி கைவிட வேண்டும். இல்லாவிட்டால் மக்களைத் திரட்டி மிகப்பெரிய அளவிலான போராட்டத்தை பாமக நடத்தும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x