பழவேற்காடு அருகே நடைபெற்ற விழாவில் மீனவர்களுடன் பொங்கல் கொண்டாடிய ஆளுநர்

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே மேல் அவுரிவாக்கம் மீனவ கிராமத்தில் நேற்று தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று பொங்கல் பானையில் பொங்கல் வைத்து பொதுமக்களுடன் தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே மேல் அவுரிவாக்கம் மீனவ கிராமத்தில் நேற்று தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று பொங்கல் பானையில் பொங்கல் வைத்து பொதுமக்களுடன் தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
Updated on
1 min read

பொன்னேரி: பழவேற்காடு அருகே மேல் அவுரிவாக்கத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சட்டையுடன் பங்கேற்றார்.

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அருகே உள்ள மேல் அவுரிவாக்கம் மீனவ கிராமத்தில் நேற்று தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர். என்.ரவி பங்கேற்றார். விழாவுக்கு வந்த அவரை கிராம பெண்கள் மலர் தூவி ஆரத்தி எடுத்து வரவேற்றனர். ஆளுநருக்கு பூரண கும்ப மரியாதை செய்யப்பட்டு, அங்காள பரமேஸ்வரி கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இந்த விழாவில், மீனவப் பெண்கள் 64 பானைகளில் பொங்கல் வைத்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி 65-வது பானையில் பொங்கல் வைத்து பொதுமக்களுடன் தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். பிறகு, வரவேற்பு நடனம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்தார். தொடர்ந்து, அவர் மீனவ மக்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினார்.

பிறகு, ஆளுநர் பேசியதாவது: மீனவர்கள் எனது இதயத்துக்கும் பிரதமரின் இதயத்துக்கும் நெருக்கமானவர்கள். நாட்டின் வளர்ச்சிக்கு மீனவர்கள் மிக முக்கியப் பங்காற்றி வருகின்றனர். மீனவர்கள் அன்றாட வாழ்க்கையில் எவ்வளவு துன்பங்களைச் சந்தித்து வருகிறார்கள், எவ்வளவு சவாலான பணியை செய்கின்றனர் என்பது எனக்கு தெரியும். மீனவர்கள் படும் துன்பங்களுக்கு தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

கடந்த 6-ம் தேதி தமிழக சட்டப்பேரவை முதல் கூட்டத் தொடரில் பங்கேற்ற ஆளுநர், அவையில் தேசியகீதம் முதலில் பாடப்படவில்லை எனக்கூறி தன் உரையை வாசிக்காமல் வெளியேறினார். இந்நிலையில், நேற்று மேல் அவுரிவாக்கத்தில் நடந்த பொங்கல் விழாவில், முதலில் தேசிய கீதமும், பின்பு தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்விழாவில், தமிழ்நாடு மீனவர் பேரவைத் தலைவர் இரா.அன்பழகனார் உள்ளிட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in