

திமுக அரசின் அவலங்களை பொதுமக்களிடம் விளக்க அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி விரைவில் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் அதிமுக தொடர்ந்து வெற்றி கண்ட கட்சி என பெயரை பெற்றுள்ளது. தொடர் தோல்வியை சந்திக்காத கட்சியாகவும் உள்ளது. அதிமுகவின் இந்த நிலையை தக்கவைக்க வேண்டிய கட்டாயம் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் 2026 தேர்தலில் வென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் பழனிசாமி பல்வேறு அரசியல் வியூகங்களை வகுத்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக திமுக ஆட்சியில் நடைபெற்று வரும் கொலை, கொள்ளை சம்பவங்கள், போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், அதில் திமுகவினருக்கு உள்ள தொடர்புகள், குறிப்பாக அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடம் விளக்க பழனிசாமி திட்டமிட்டுள்ளார். அதற்காக தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக நேற்று முன்தினம் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பழனிசாமி பேசியிருப்பதாகவும், சுற்றுப்பயணத்துக்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட செயலாளர்கள் செய்ய தயாராக இருக்க வேண்டும் என்றும் பழனிசாமி அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், திமுகவை மக்கள் புறக்கணித்துவிட்டார்கள். மக்களை பார்க்க திமுகவினர் அஞ்சுகின்றனர். அதனால் 2026 தேர்தல் நமக்கு சாதகமாகவே இருக்கும். தேர்தலுக்கு இன்னும் 14 மாதங்களே உள்ளன. அதனால் இந்த 14 மாதங்கள் நாம் கடுமையாக உழைத்தாக வேண்டும் என்று அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
அதனால், பழனிசாமியின் சூறாவளி சுற்றுப்பயணத்துக்கான பணிகளை மாவட்ட செயலாளர்கள் தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி அவர் இம்மாத இறுதியில் சுற்றுப்பயணத்தை தொடங்குவார். எங்கிருந்து தொடங்குவது என்பது குறித்து நிர்வாகிகளுடன் பழனிசாமி தொடர்ந்து ஆலோசித்து வருகிறார். கோவையில் இருந்து தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடப்பதால், அங்கு தொடங்குவது சரியாக இருக்குமென்றும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. விரைவில், தேதியும் சுற்றுப்பயணம் தொடங்கும் இடமும் அறிவிக்கப்படும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.