

போதைப் பொருளை கண்டறியும் வகையில் தமிழக காவல் துறையில் 'மோப்ப நாய் பிரிவு’ விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான முதல்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
போதைப் பொருட்கள் கடத்தல், பதுக்கல், விற்பனையை தடுக்க தமிழக காவல்துறை பல்வேறு தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக போதைப் பொருள் வியாபாரிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். போதைப் பொருள் தொடர்பாக 2023-ல் 10,256 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 14,770 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கஞ்சா, போதை மாத்திரை உட்பட பல கோடி ரூபாய் மதிப்புள்ள கொடிய போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதேபோல், கடந்தாண்டில் 6,054 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 9,731 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துகளும் முடக்கப்பட்டன.
இதுபோன்ற நடவடிக்கைகள் மட்டும் அல்லாமல் போதைப் பொருட்களின் தேவைக்குறைப்பு என்ற இலக்கை அடைவதற்காக போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. குறிப்பாக போதைப் பொருட்களுக்கு எதிரான திட்டம் என்ற பெயரில் பள்ளி, கல்லூரிகளில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான குழுக்களை காவல்துறை அமைத்தது. இதுதவிர காவல்துறை, உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறையைச் சேர்ந்த அதிகாரிகளைக் கொண்ட 391 சிறப்புக் குழுக்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்தக் குழுக்கள் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் அருகாமையில் திடீர் சோதனை மேற்கொள்ளும் பணியில் ஈடுபட்டது. இவ்வாறாக 2023 ஆகஸ்ட் முதல் கடந்தாண்டு இறுதிவரை 13,899 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு 17.14 டன் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தது. இதுதொடர்பான குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களிடமிருந்து ரூ.15.82 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டதோடு 9,716 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன.
இருப்பினும், போதைப் பொருட்களின் நடமாட்டம் குறைந்துள்ளதே தவிர முற்றிலும் கட்டுக்குள் வரவில்லை. இதையடுத்து, போதைப்பொருள் ஒழிப்பில் அடுத்த கட்டமாக தமிழக காவல் துறையில் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை கண்டறியும் வகையில் போதைப் பொருட்களை கண்டறியும் 'மோப்ப நாய் பிரிவு’ விரைவில் தொடக்கப்பட உள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, 'இந்து தமிழ் திசை' நாளிதழிடம் அவர் கூறும்போது, ‘தமிழகம் முழுவதும் போதைப் பொருள் நடமாட்டத்தை கண்காணிக்க, தமிழக காவல் துறையில் புதிதாக, போதைப் பொருட்களை கண்டறியும் 'மோப்ப நாய் பிரிவு’ (Narcotic Sniffer Dogs Squad) உருவாக்கப்பட உள்ளது. இதன்மூலம் போதைப் பொருள் ஒழிப்பில் மேலும் சிறப்பாக செயல்பட முடியும்’ என்றார்.