

ராசேந்திர சோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அவரது கல்லறை கண்டுகொள்ளப்படவில்லை. அந்த இடம் சீரமைக்கப்படாமல் இருப்பது குறித்து ‘‘தி இந்து உங்கள் குரல்” மூலமாக வரலாற்று ஆர்வலர் நரசிம்மன் பதிவு செய்திருந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் வெம்பாக்கம் ஒன்றியத்தில் இருந்து 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பிரம்மதேசம் கிராமம்.
இங்குள்ள சந்திர மவுலீஸ்வரர் கோயிலில் மாமன்னன் ராசராச சோழனின் மகனும் கங்கை கொண்டான், கடாரம் வென்றான் என்று போற்றப்படும் ராசேந்திர சோழனின் கல்லறை உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. ராசேந்திர சோழன் உயிர்நீத்த பின், அவரது மனைவி வீரம்மாதேவி உடன்கட்டை ஏறியதும் கோயிலில் உள்ள கல்வெட்டு மூலம் தெரிகிறது. ராசேந்திர சோழன், 82-வது வயதில், பிரம்மதேசத்தில் தங்கி இறைவழிபாடுகளை மேற்கொண்டிருந்தபோது கி.பி. 1044-ல் உயிரிழந்துள்ளார் என்ற வரலாற்றுப் பின்னணியையும் நரசிம்மன் பதிவு செய்திருந்தார்.
மணிமண்டபம்
அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் ராசேந்திர சோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழாவை கொண்டாடும் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இரா.கோமகனிடம் வாசகரின் கருத்து குறித்து கேட்டபோது,
“பிரம்மதேசத்தில் உள்ள ராசேந்திர சோழன் கல்லறையில் ஜூலை 25-ம் தேதி பூஜை நடத்தப்பட்டது.
அவரது கல்லறையை சீரமைத்து விழா நடத்த உள்ளூர் ஆர்வலர்களுடன் ஆலோசித்து வருகிறோம். அவரது சமாதியில் மணிமண்டபம் கட்டுவதற்கான முயற்சியும் எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.