

நெல்லையப்பர் கோயில் காந்திமதி யானை உடல் நலக்குறைவால் நேற்று உயிரிழந்தது. தொடர்ந்து, ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்கு கடந்த 1985-ம் ஆண்டு நன்கொடையாளர் மூலம் யானை வழங்கப்பட்டது. அந்த யானைக்கு காந்திமதி என்று பெயர் சூட்டப்பட்டு, பராமரிக்கப்பட்டு வந்தது.
நெல்லையப்பர் கோயிலில் நடைபெறும் பல்வேறு விழாக்களில் காந்திமதி யானை பங்கேற்கும் அழகை பக்தர்கள் கண்டு மகிழ்ந்தனர். காந்திமதி யானைக்கு 56 வயதான நிலையில், மூட்டு வலி உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டன. கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக கால்நடை மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக மூட்டுவலி அதிகமாகி, யானை காந்திமதி அவதியுற்று வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் காலையில் யானை எழுந்து நிற்க முடியாமல் சிரமப்பட்டது. கால்நடை மருத்துவர்களை வரவழைத்து, சிகிச்சை அளித்தனர். இரண்டு கிரேன்கள் கொண்டு வரப்பட்டு, யானையின் உடலில் பெல்ட் கட்டி, தூக்கி நிறுத்தினர். சிறிது நேரம் நின்ற யானை, மீண்டும் படுத்துக்கொண்டது. மருத்துவக் குழுவினர் யானைக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று காலை காந்திமதி யானை உயிரிழந்தது. நித்திய பூஜைக்குப் பின்னர் கோயில் நடை அடைக்கப்பட்டது. யானையின் இறுதிச் சடங்கு முடியும் வரை கோயிலுக்குள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என்றும், பரிகாரப் பூஜைகளுக்கு பிறகு கோயில் நடை திறக்கப்படும் என்றும் கோயில் நிர்வாகம் அறிவித்தது.
யானையின் உடலுக்கு அமைச்சர் கே.என்.நேரு, நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், சட்டப்பேரவை உறுப்பினர் அப்துல் வகாப், மேயர் ராமகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்ரா, துணை மேயர் கே.ஆர்.ராஜு மற்றும் ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர், யானையின் உடல் கிரேன் மூலம் லாரியில் ஏற்றப்பட்டு, இறுதி ஊர்வலம் நடைபெற்றது. திருநெல்வேலி தாமரைகுளம் பகுதியில் யனை அடக்கம் செய்யப்பட்டது.