30,000 கிலோ எடையை சுமந்து செல்லும் ராக்கெட் தயாரிக்கும் பணி தீவிரம்: குமரியில் இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தகவல்

30,000 கிலோ எடையை சுமந்து செல்லும் ராக்கெட் தயாரிக்கும் பணி தீவிரம்: குமரியில் இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தகவல்
Updated on
1 min read

நாகர்கோவில்: 30 ஆயிரம் கிலோ எடையை சுமந்து செல்லும் அளவிற்கு திறன் படைத்த ராக்கெட் ஒன்று தயாரிக்க திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருகிறது என குமரியில் இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்தார்.

இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வி.நாராயணன் இன்று அவரது சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் மேலக்காட்டுவிளை வந்தார். அங்கு அவரது குடும்பத்தினரை சந்தித்து தனது பெற்றோர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்தார். மேலும் அவரது ஊரில் உள்ள சிவன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் இஸ்ரோவின் தலைவராக பொறுப்பேற்க உள்ள நிலையில் மனைவி கவிதாராஜ், மகன் கைலேஷ், மகள் அனுபவமா ஆகியோருடன் சுவாமிதோப்பு அன்புவனத்திற்கு சென்று அய்யாவழி சமய தலைவர் பாலபிரஜாபதி அடிகளாரை சந்தித்து ஆசிபெற்றார். அதை தொடர்ந்து அய்யா வைகுண்டர் தலைமை பதிக்கு சென்று வழிபட்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்: தன் மீதுள்ள நம்பிக்கையால் மிகவும் முக்கியமான பொறுப்பை பாரத பிரதமர் மோடி வழங்கி உள்ளார். இதன் மூலம் நாட்டிற்கு சேவை செய்ய பெரிய வாய்ப்பு கிடைத்ததாக நினைக்கிறேன். நமது நாட்டை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றுவதற்கு பிரதமர் அறிவுறுத்தல் படி கூட்டு முயற்சி மூலம் அனைவரும் இணைந்து பாடுபடுவோம்.

எதிர்காலத்தில் சந்திரயான் 4 நிலவில் தரை இறங்க உள்ளது. விரைவில் அதற்கான பணி துவங்கும். இந்தியா சார்பில் விண்வெளி நிலையம் கட்டப்பட உள்ளது. அதற்காகவும், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கும் டாக்கிங் தொழில்நுட்பம் உதவும்.

இந்த மாதம் நேவிகேஷன் செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்ட உள்ளது. இதுபோன்று பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. 30 ஆயிரம் கிலோ எடையை சுமந்து செல்லும் அளவிற்கு திறன் படைத்த ராக்கெட் ஒன்று தயாரிக்க திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருகிறது” என்றார்.

சுவாமித்தோப்பு அன்புவனத்திற்கு இன்று சென்ற இஸ்ரோ தலைவர் வி.நாராயணன், அய்யாவழி சமயத்தலைவர் பாலபிரஜாபதி அடிகளாரிடம் குடும்பத்தினருடன் ஆசிபெற்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in