

வேலூர்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆணவம் அதிகம் எனக் கூறும் தமிழக ஆளுநருக்கு தான் திமிர் அதிகம் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் வேலூர் மாங்காய் மண்டி அருகே ‘ அரசு பொருட்காட்சி’ திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடந்தது. நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி தலைமை வகித்தார். தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொருட்காட்சியை திறந்து வைத்தார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது: ‘‘தமிழக சட்டப்பேரவையில் மரபு மீறவில்லை. காலம், காலமாக கூட்டம் தொடங்கும்போது தமிழ்தாய் வாழ்த்து பாடுவதும், முடியும் போது தேசிய கீதம் பாடுவதும்தான் வழக்கம். இதை ஆளுநர் மாற்றச் சொன்னார். தற்போது தமிழக முதல்வருக்கு ஆணவம் என அவர் கூறியுள்ளார். அவருக்கு தான் திமிர் அதிகம்.
பெரியார் குறித்து அவதூறு பேசுபவர்களின் பிறப்பையே நான் சந்தேகப்படுகிறேன். ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக, தேமுதிக, பாஜக போன்ற கட்சிகள் புறக்கணித்துள்ளதற்கு காரணம் அவர்களின் பலம் அங்கு குறைவாக இருப்பதால் தான்’’ இவ்வாறு அவர் கூறினார்.
அரசு பொருட்காட்சி குறித்து மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி கூறுகையில், ‘‘வேலூர் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அரசு பொருட்காட்சியானது ஜன.12 தொடங்கி வரும் பிப்.25ம் தேதி வரை அதாவது 45 நாட்கள் நடக்கிறது. இப்பொருட்காட்சியில் அரசின் அனைத்து துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சி திட்டப்பணிகள், பல்வேறு திட்டங்கள் வாயிலாக பயன் பெற்றுள்ள விவரங்கள் குறித்து கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதில், பொதுமக்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக பொதுமக்களுக்கான அங்காடிகள், உணவகம், விளையாட்டு அரங்குகளுடன் கூடிய பொழுதுபோக்கு சாதனங்கள் அமைய உள்ளன. எனவே, வேலூர்மாவட்டம் மற்றும் அதைசுற்றியுள்ள பொதுமக்கள் அரசு பொருட்காட்சியை தவறாமல் கண்டுகளித்து பயன்பெறவேண்டும்’’ இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயர் சுஜாதா, 1வது மண்டலக்குழுத்தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, மாவட்டவருவாய் அலுவலர் மாலதி, திட்ட இயக்குநர் செந்தில்குமரன், வருவாய் கோட்டாட்சியர்கள் பாலசுப்பிரமணியன், சுபலட்சுமி மற்றும் உள்ளாட்சி பிரநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.