Published : 12 Jan 2025 01:46 PM
Last Updated : 12 Jan 2025 01:46 PM
காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஏகானாபுரம் உள்ளிட்ட கிராம மக்களை, ஜன-19 மற்றும் 20 தேதிகளில் ஏதேனும் ஒரு நாளில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சந்தித்து பேச, அனுமதி மற்றும் பாதுகாப்பு கோரி அக்கட்சியின் மாநில பொருளாளர் வெங்கட்ராமன் தலைமையிலான நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி அலுவலகத்தில் மனு வழங்கியுள்ளனர்.
காஞ்சிபுரம் அடுத்த பரந்தூரில் சென்னையின் 2-வது பசுமை விமான நிலையம் அமைக்க முடிவு செய்து, அதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக, 13 கிராமங்களைச் சேர்ந்த 5,100 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. மேலும், ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் முழுமையாக கையகப்படுத்தப்பட உள்ளதால் அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து 900 நாட்களை கடந்தும் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும், தளர்ந்து விடாமல் கிராம மக்கள் கூடி பேசி தினந்தோறும் இரவு நேரத்தில் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர். மேலும், இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக உள்ள விஜய் புதிதாக தொடங்கியுள்ள கட்சியில் இருந்து தமக்கு ஆதரவான குரல் வந்ததால் போராட்டக்குழுவினர் மற்றும் நிலங்களை இழக்கும் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும், போராட்டக் குழு சார்பில் தமிழிக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு நன்றியும் தெரிவித்தனர்.
ஆனால், தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு வேறு எந்த போராட்டத்தையும் தவெகவினர் மேற்கொள்ளவில்லை என அப்பகுதி கிராம மக்கள் ஆதங்கம் தெரிவித்தனர். இதுதொடர்பா,க இந்து தமிழ் திசையில் ஆன்லைன் பக்கத்தில் கடந்த ஜன-2ம் தேதி செய்தி வெளியிடப்பட்டது. இந்நிலையில், பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் குழுவினரை, வரும் ஜன- 19 மற்றும் 20 ஆகிய நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் தவெக கட்சியின் தலைவர் விஜய் நேரில் சந்தித்து பேச உள்ளதாகவும் அதனால், மேற்கண்ட நாளில் போராட்டக்குழுவினரை சந்திக்க அனுமதியும் மற்றும் போலீஸ் பாதுகாப்பும் கோரி தவெகவின் மாநில பொருளாளர் வெங்கட்ராமன் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு மனு வழங்கினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT