

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியை மாநிலக் கட்சியாக அங்கீகரித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம், பானை சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.
1999-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் முதன்முதலாக தேர்தல் அரசியலில் பங்கெடுத்தது விசிக. 2001 சட்டப்பேரவைத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில், மங்களூர் தொகுதியில் போட்டியிட்டு சட்டப்பேரவைக்குள் நுழைந்தார் திருமாவளவன். 2019 மக்களவைத் தேர்தலில் உதயசூரியன் மற்றும் பானை சின்னத்தில் போட்டியிட்டதால், இரு தொகுதிகளையும் வென்ற நிலையிலும், விசிகவுக்கு மாநிலக் கட்சி அங்கீகாரம் கிடைக்கவில்லை.
இந்நிலையில், மாநிலத்தில் உள்ள மக்களவைத் தொகுதி எண்ணிக்கையில் 5 சதவீத தொகுதியை வென்ற கட்சிக்கு மாநிலக் கட்சி அங்கீகாரம் என்ற அடிப்படையில் விசிகவை மாநிலக் கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்து, பானை சின்னம் வழங்கியுள்ளது.
சென்னை அசோக் நகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று காலையிலேயே முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் திரண்டு, திருமாவளவனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணி மண்டபத்தில், விசிக தலைவர் திருமாவளவன், எம்எல்ஏ-க்கள் சிந்தனைச் செல்வன், எஸ்.எஸ்.பாலாஜி, பனையூர் பாபு, ஆளூர் ஷாநவாஸ் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறும்போது, "மகத்தான அங்கீகாரத்தை வழங்கியுள்ள தமிழக மக்களுக்கும், திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு நன்றி. தமிழக மக்களின் நலன்களுக்காகவும், வாழ்வுரிமைகளுக்காகவும் விசிக தொடர்ந்து போராடும். மக்களின் பேரன்பைப் பெற்ற பேரியக்கமாக வளரும். விசிக அங்கீகாரம் பெற தொண்டர்களின் தியாகம் அளப்பரியது. 1999-ல் விசிக தேர்தலில் போட்டியிட்டபோது வன்முறையாளர்களின் தாக்குதலில் கட்சியினரும், மக்களும் ரத்தம் சிந்தினர். பாதிக்கப்பட்ட எனது தொகுதி வாக்காளர்களுக்கு இந்த வெற்றியை, அங்கீகாரத்தை சமர்ப்பிக்கிறேன்" என்றார்.
முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "விசிகவை அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாகத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன். சகோதரர் திருமாவளவனின் உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாக கருதி, இதைப் பாராட்டுகிறேன்" என்று முதல்வர் பதிவிட்டுள்ளார்.