Published : 12 Jan 2025 01:58 AM
Last Updated : 12 Jan 2025 01:58 AM

ஜல்லிக்கட்டு போட்டிக்கு வாடிவாசல்கள் தயார்: மாடுபிடி வீரர்களுக்கு இன்றுமுதல் டோக்கன் விநியோகம்

கோப்புப்படம்

மதுரை: அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கான வாடிவாசல் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. காளைகளின் உரிமையாளர்களுக்கும், களமிறங்கும் மாடுபிடி வீரர்களுக்கும் இன்றுமுதல் (ஜன. 12) டோக்கன் விநியோகம் செய்யும் பணி தொடங்குகிறது.

பொங்கல் விழாவை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் வரும் 14-ம் தேதி அவனியாபுரத்திலும், 15-ல் பாலமேட்டிலும், 16-ல் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்று வருகின்றன. முன்னதாக, ரூ.54 லட்சத்துக்கு டெண்டர் விடப்பட்டு, வாடிவாசல், பார்வையாளர்கள் அமரும் கேலரி அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன. நேற்று வாடிவாசல் அமைக்கும் பணி நிறைவுபெற்றது. அதேபோல, பாலமேடு, அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான வாடிவாசல்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

இந்த 3 ஜல்லிக்கட்டுப் போட்டிகளிலும் பங்கேற்க 12,632 காளைகள் ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. 5,347 மாடுபிடி வீரர்கள் பெயரைப் பதிவு செய்துள்ளனர். இன்றுமுதல் ‘டோக்கன்’ விநியோகம் செய்யப்பட உள்ளது. அவனியாபுரத்தில் இன்றும், 13-ம் தேதி பாலமேட்டிலும், 14-ம் தேதி அலங்காநல்லூரிலும் டோக்கன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டுப் பயணிகள்... மதுரை மாவட்ட சுற்றுலா அலுவலர் பாலமுருகன் கூறும்போது, "அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் போட்டியை கண்டுரசிக்க நிரந்தர கேலரி அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு போட்டியைக் காண விரும்பும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும். மேலும், தங்கள் பெயர், பாஸ்போர்ட் நகல் போன்ற விவரங்களுடன் மதுரை மேலவெளி வீதியில் உள்ள சுற்றுலா அலுவலகத்தில் இன்றுமுதல் முன்பதிவு செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு 0452-2334757 என்ற தொலைபேசி எண்ணிலும், touristofficemadurai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x