Published : 11 Jan 2025 03:53 PM
Last Updated : 11 Jan 2025 03:53 PM
சிவகாசி: “நாம் தமிழர் கட்சியை கலைத்து விட்டு சீமான் பாஜகவில் சேர வேண்டும்”, என்று சிவகாசியில் மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறியுள்ளார்.
சிவகாசி ஆயுதப்படை வளாகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தை விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கண்ணன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
அதன்பின் மாணிக்கம் தாகூர் அளித்த பேட்டியில் கூறியதாவது: முதல்வர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அகில இந்திய காங்கிரஸ் தலைமையிடம் ஒப்புதல் பெற்று ஈரோடு கிழக்குத் தொகுதியில் திமுக போட்டியிடும் என தமிழக காங்கிரஸ் தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். திமுக வேட்பாளர் சந்திரகுமார் வெற்றிக்கு இண்டியா கூட்டணி கட்சியினர் இணைந்து பாடுபடுவோம்.
பத்திரிகை விளம்பரத்துக்காக இந்தியாவே போற்றுகின்ற தலைவர்களை அண்ணாமலையும் சீமானும் விமர்சனம் செய்கின்றனர். பாஜக கொள்கைகளுக்காக இதுபோன்ற காரியங்களை சீமான் தொடர்ந்து செய்து வருகிறார். கடந்த காலங்களில் பெரியார் குறித்து சீமான் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஆர்எஸ்எஸ்ஸின் கொள்கைகளை சீமான் பேசி வருகிறார். தமிழகத்தில் பாஜக காலூன்றுவதற்கு சீமான் துணை நிற்கின்றார். இது பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கும், தமிழர்களுக்கும் சீமான் செய்யும் துரோகம். நாம் தமிழர் கட்சியை கலைத்துவிட்டு சீமான் பாஜகவில் சேர வேண்டும்.
அண்ணா பல்கலை. விவகாரத்தை திமுக கூட்டணி கட்சிகள் அனைவரும் கண்டித்துள்ளோம். இந்த விவகாரத்தில் தமிழக அரசு குற்றவாளியை உடனடியாக கைது செய்துள்ளது. இந்த விவகாரத்தில் திமுக கூட்டணி கட்சிகள் போராடவில்லை எனக் கூறுவது நியாயமற்றது. அண்ணாமலையும் சீமானும் செய்வதை எல்லாம் நாங்கள் செய்ய வேண்டும் என நினைத்தால் அது முடியாது. சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
அரசு நல்லது செய்தால் பாராட்டுவோம், தவறு செய்தால் அதை சுட்டிக் காட்டுவது எங்கள் கடமை. அண்ணா பல்கலை. போன்று தமிழகத்தில் உள்ள கல்வி நிலையங்களில் அசம்பாவிதம் நடைபெறாத வகையில் தமிழக அரசு சட்ட திருத்த மசோதாவை கொண்டு வந்துள்ளது வரவேற்கத்தக்கது.” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT