Published : 11 Jan 2025 03:33 PM
Last Updated : 11 Jan 2025 03:33 PM
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூர் பேருந்து நிலையம் அருகே அடிக்கடி விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்கு மேம்பாலம் கட்டப்படவேண்டும் என்ற அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதை பரிசீலித்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம், ரூ.8.46 கோடி மதிப்பீட்டில் வேப்பூர் கூட்டு ரோடு முதல் சிறு நெசலூர் பாலம் வரை 1.25 கி.மீ நீளத்துக்கு பாலம் கட்ட முடிவு செய்து, இதற்கான அடிக்கல் நாட்டு விழாவை கடந்த 2019 ஜூலை 31-ம் தேதி நடத்தியது.
திட்டமிட்டுள்ள மேம்பாலத்தால் கனரக வாகனங்கள் அடுத்தடுத்த மேம்பாலங்களில் செல்லும் போது விபத்துக்குள்ளாகும் என்பதால் வேப்பூர் நான்குமுனை சந்திப்பில் இருந்து சிறுநெசலூர் வரை ஒரே மட்டத்தில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத் துறைக்கு எடுத்துரைக்கப்பட்டது. ஆனால், அக்கருத்தை பரிசீலிக்காமல் பாலப் பணியை நெடுஞ்சாலைத்துறை தொடங்கியது.
இதற்கிடையே, இந்த வழியே செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, அதன் வசதிக்கேற்ப பாலம் அமைக்கப்படவேண்டும் என வேப்பூரைச் சேர்ந்த கதிர்வேல் என்பவர் பொது நல வழக்குத் தொடுத்தார். வழக்கை காரணம் காட்டி பாலப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை நிர்வாகம் கிடப்பில் போட்டுள்ளது.
பாலப் பணி கிடப்பில் போடப்பட்டதும், வாகனப் போக்குவரத்து சர்வீஸ் சாலைக்கு மாற்றப்பட்டது. இதைதங்களுக்கு சாதகமாக பயன்படுத்த தொடங்கிய அப்பகுதி விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை உலர வைக்க இந்தப் பகுதி சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தப் பகுதியில் அறுவடையாகும் தானியங்களை தேசிய நெடுஞ்சாலையில் காயவைத்து, உடனுக்குடன் விற்பனை செய்து, வாகனத்தில் ஏற்றுவது வரை எளிதாக உள்ளது. “இந்தப் பகுதி நெடுஞ்சாலை எப்போது பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரியாது, அதுவரை நாங்கள் இதை பயன்படுத்திக் கொள்வதில் தவறேதும் இல்லையே!” என்று தெரிவிக்கிறார் சிறுநெசலூரைச் சேர்ந்த விவசாயி குணசேகரன்.
“இந்தப் பகுதி நெடுஞ்சாலை இயங்காத நிலையில், சென்னை - திருச்சி இடையே செல்லும் அனைத்து வாகனங்களும் சர்வீஸ் சாலையில் செல்கிறது. 2 கி.மீ நீளமுள்ள சர்வீஸ் சாலையை கடந்து செல்வதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது. மழையில் சாலை மிகுந்த சேதமடைந்திருக்கும் நிலையில், வாகனத்தை இச்சாலையில் ஓட்டிச் செல்லும் போது, பழுதாகி விடுகிறது. இந்த நிலையிலும் சுங்கச் சாவடியில் கட்டணம் வசூலிக்கும் கொடுமை தொடரவே செய்கிறது” என்று ஆதங்கத்துடன் தெரிவிக்கிறார் பெரம்பலூரைச் சேர்ந்த ஐடி ஊழியர் பாஸ்கர்.
“சென்னையில் இருந்து 4 மணி நேரத்தில் வேப்பூரை வந்தடைகிறோம். வேப்பூர் பாலத்தைக் கடந்த செல்லவே அரைமணி நேரத்திற்கும் மேலாகிறது” என்கிறார் அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர் பழனிவேல். ராஜபாளையத்தில் இருந்து சென்னைக்கு ஆயத்த ஆடைகளை ஏற்றிச் செல்லும் சரக்கு வாகன ஓட்டுநர் சக்திவேல் கூறுகையில், “பொதுநல வழக்குத் தொடுத்திருப்பவரின் நோக்கம் சரியே; அதே நேரத்தில் சாலைப் பணியை நெடுஞ்சாலைதுறையினர் கிடப்பில் போட்டிருப்பதால் அவதிக்குள்ளாவது நாங்கள் தான்” என்று தெரிவிக்கிறார்.
இப்படியாக, இந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக பண்டிகைக் காலங்களிலும், தொடர் விடுமுறை காலங்களிலும் சொந்த ஊர் சென்று திரும்பும் தென் மாவட்ட மக்கள், வேப்பூர் பகுதியில் சிக்கி, திக்கித் திணறி வருகின்றனர். ஏற்கெனவே, சுங்கவரி கட்டணம் உள்ளிட்ட நெருக்கடியை எதிர்கொண்டு வரும் சூழலில், இந்த போக்குவரத்து நெருக்கடியால் எரி பொருள் விரயம் உள்ளிட்ட செலவினங்கள் கூடுவதை சுட்டிக்காட்டுகின்றனர்.
புத்தாண்டு முடிந்து பொங்கல் விடுமுறைக்குச் செல்ல ஆயத்தமாகி வரும் கார் உரிமையாளர்கள், வேப்பூரைத் தவிர்த்து, மாற்று வழி ஏதேனும் உள்ளதா என ஆராய்ந்து வருகின்றனர். மேம்பாலப் பணி கிடப்பில் போடப்பட்டிருப்பது தொடர்பாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குநர் நவீனிடம் கேட்டபோது, “பாலப் பணிக்கான நிதி ஒதுக்கீட்டில் சற்று தொய்வு ஏற்பட்டிருந்தது. தற்போது அது சரியாகிவிட்டது.
எனவே எதிர்வரும் மார்ச் மாத இறுதிக்குள் பாலப்பணி முடிந்து மேம்பாலத்தில் போக்குவரத்து செயல்படும்” என்று தெரிவித்தார். இவரின் பதில் சற்றே ஆறுதலைத் தருகிறது. அவர் கூறுவது போல பணிகள் நடந்து முடிக்கட்டும். அதுவரையில் இந்த துன்பத்தை பொறுத்தருள்வோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT