Published : 11 Jan 2025 01:23 PM
Last Updated : 11 Jan 2025 01:23 PM
சென்னை: பெரியாரை கொச்சைப்படுத்தும் சீமானுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திராவிடர் இயக்கம் குறித்தும், திராவிட இயக்கத் தலைவர்கள் குறித்தும், அவதூறுகளையும், இழிவுகளையும் தொடர்ந்து அள்ளி வீசி வருகிற நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், எல்லை மீறி, வெறி உணர்ச்சியோடு, மனம் போன போக்கில் தந்தை பெரியார் எனும் மாமனிதரை கொச்சைப்படுத்தி பத்திரிகையாளர்களிடம் பேசி உள்ளார்.
தந்தை பெரியாரைப் பற்றி பேசிய கருத்துகளுக்கு ஆதாரம் என்ன? என்று கேட்டால், சிறிதும் பொறுப்பின்றி கோமாளித்தனமாகவும், ஆணவமாகவும், அநாகரிகமாக மேலும் மேலும் நடந்து கொள்கிறார். இதற்கு எதிர்வினையாக கட்சி வேறுபாடு இல்லாமல் தமிழகத்தில் போராட்டங்களும், நீதிமன்றங்களில் முறையீடு செய்வதும் நடந்து வருகின்றன.
சீமானின் பேச்சு சமூகத்தில் பதற்றம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்தப் பிரச்சினையில் காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து அது தொடர்பான அறிக்கையை ஜனவரி 20 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றக்கிளை, மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
பொது இடத்தில் அமைதியை குலைத்தல், கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசுதல் முதலான பிரிவுகளில் சீமான் மீது 60-க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை எதனைப் பற்றியும் சிறிதும் பொருட்படுத்தாமல், அகம்பாவத்துடன் மேலும் மேலும் சீமான் உளறி வருவது வன்மையான கண்டனத்திற்கு உரியதாகும்.
தமிழ்நாட்டை கலவர பூமியாக்கி, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்ற குற்றம் சுமத்துவதற்கான முதல்கட்ட முயற்சியே இது. தமிழ்நாடு அரசு, இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இவரை நீதிமன்றத்தின் கூண்டிலேற்றி, விசாரித்து, உரிய தண்டனையை உடனடியாக அளிக்க வேண்டும். நாகரிக அரசியலை விரும்புகிற அனைவரும் இத்தகைய ‘தீய சக்திகளுக்கு’ தக்க பாடம் புகட்டிட தொடர்ந்து அணிதிரள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT