

திமுக தலைவர் கருணாநிதி தற்போது நலமாக இருக்கிறார் என்று அவரது மகளும், திமுக எம்.பி.யுமான கனிமொழி தெரிவித்துள்ளார்.
தீவிர அரசியலிலிருந்து விலகி ஓய்வெடுத்து வரும் திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த 18-ம் தேதி முதல் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, அவரது உடல்நலம் குறித்த செய்திகள் வெளியாகின. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், டிரயாக்ஸ்டமி செயற்கை சுவாசக் குழாய் புதிதாக பொருத்தப்பட்டதால் காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாகவும், தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் கருணாநிதிக்கு திடீரென ரத்த அழுத்தம் குறைந்ததாக காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு கருணாநிதியின் உடல்நிலை நலமாக இருப்பதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
இதுகுறித்து கருணாநிதியின் மகளும், திமுக எம்.பி.யுமான கனிமொழி செய்தியாளர்களிடம் கூறும்போது, "கருணாநிதிக்கு வெள்ளிக்கிழமை திடீரென ரத்த அழுத்தம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரின் ரத்த அழுத்தம் சீராக உள்ளது. தற்போது கருணாநிதி நலமாக இருக்கிறார். அவருடைய உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.