Published : 11 Jan 2025 10:48 AM
Last Updated : 11 Jan 2025 10:48 AM

“பெரியாரின் புகழ் வெளிச்சத்தை அரைகுறை அவதூறால் மறைக்க முடியாது” - அன்புமணி

அன்புமணி ராமதாஸ் | கோப்புப் படம்.

சென்னை: “பெரியாரின் வரலாறும், சாதனைகளும் மிக நீண்டவை. அவற்றை முழுமையாக படிக்காமல், அரைகுறை புரிதலுடன் அவற்றை விமர்சிப்பதை ஏற்க முடியாது. அவரது புகழ் வெளிச்சத்தை அரைகுறை அவதூறுகளால் ஒருபோதும் மறைக்க முடியாது.” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெரியாரின் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில், அவரைப் பற்றி அடிப்படை இல்லாத அவதூறுகள் பரப்பப்படுவது கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும். பெரியாரை போற்றுவதற்கு ஆயிரமாயிரம் காரணங்கள் இருக்கும் நிலையில், அவற்றை பயன்படுத்திக் கொள்ளாமல் பெரியாரை சிறுமைப்படுத்தும் வகையிலான எந்த செயலையும் பாட்டாளி மக்கள் கட்சி அனுமதிக்காது.

இந்திய விடுதலைப் போராட்டத்தின் கதாநாயகர் மகாத்மா காந்தி என்றால், தமிழ்நாட்டின் சமூக விடுதலைப் போராட்டத்தின் கதாநாயகன் பெரியார் அவர்கள் தான். தமிழ்நாட்டில் செண்பகம் துரைராஜன் வழக்கில் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட போது, சமூகநீதியைக் காப்பதற்காக, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை திருத்த வேண்டும் என்ற போராட்டத்தை முன்னெடுத்து வெற்றி கண்டவர் பெரியார் தான்.

சட்டநாதன் ஆணையத்தின் பரிந்துரைப்படி, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க கலைஞர் அரசு மறுத்த போது, அதைக் கண்டித்ததுடன், அரசுக்கு அழுத்தம் கொடுத்து இட ஒதுக்கீடு 31% ஆக உயர்த்தப்படுவதற்கு காரணமாக இருந்தவர் பெரியார். அதனால் தான் அவரை கொள்கை வழிகாட்டியாக பாட்டாளி மக்கள் கட்சி ஏற்றிருக்கிறது.

தமது கொள்கையில் உறுதியாக இருந்தாலும் தம்மைத் தேடி வந்தவர்களின் உணர்வுகளையும், மத நம்பிக்கைகளையும் மதித்தவர். தமது வீட்டுக்கு வந்த திருவிகவின் நம்பிக்கையை மதித்து, அவர் இட்டுக் கொள்வதற்காக திருநீறு சம்படத்தை ஏந்தி வந்தவர் அவர். 1927ஆம் ஆண்டு குடி அரசு இதழைத் தொடங்கிய போது முதல் இதழிலேயே வள்ளலாரின் வரிகளை பயன்படுத்தியவர் அவர்.

\வள்ளலார் சத்திய ஞானசபைக்கு சென்ற போது, அங்கு ‘‘கொலை, புலை தவிர்த்தவர்கள் மட்டுமே உள்ளே வரவும்’’ என எழுதப்பட்டிருந்தது. அதைக் கண்டதும் ‘‘நான் எல்லா அசைவ உணவையும் சாப்பிடுபவன். உள்ளே வர மாட்டேன்’’ என மறுத்தவர் பெரியார். அவரது வரலாறும், சாதனைகளும் மிக நீண்டவை. அவற்றை முழுமையாக படிக்காமல், அரைகுறை புரிதலுடன் அவற்றை விமர்சிப்பதை ஏற்க முடியாது. அவரது புகழ் வெளிச்சத்தை அரைகுறை அவதூறுகளால் ஒருபோதும் மறைக்க முடியாது.

பெரியாரை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. பெரியாரின் கொள்கைகளில் உடன்பாடு இல்லாதவர்கள் அவரை கொள்கைரீதியாக விமர்சிக்கலாம்; மாறாக அவர் மீது அவதூறு பரப்புவதை அனுமதிக்க முடியாது. இந்த அடிப்படை உண்மையை அனைவரும் புரிந்து கொண்டு அனைவரும் அதற்கேற்றவாறு நடந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x