Published : 11 Jan 2025 06:30 AM
Last Updated : 11 Jan 2025 06:30 AM
சென்னை: சென்னையில் ரவுடி ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்ட போலீஸாரை நேரில் அழைத்து காவல் ஆணையர் பாராட்டினார். சென்னையில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகரித்தன. உச்ச கட்டமாக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் அவரது வீட்டருகே கொலை செய்யப்பட்டார்.
இதையடுத்து, காவல் ஆணையராக அருண் நியமிக்கப்பட்டார். முதல் கட்டமாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி திருவேங்கடம் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். இதையடுத்து, வீடு வீடாகச் சென்று ரவுடிகள் எச்சரிக்கப்பட்டதோடு, ஏ, ஏ பிளஸ், பி, சி என வகைப்படுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டனர்.
ரவுடிகளை ஒழிக்க ரவுடிகள் ஒழிப்பு பிரிவு முடுக்கிவிடப்பட்டதோடு சென்னை பெருநகர காவல் துறை நுண்ணறிவுப் பிரிவில் புதிதாக ஒருங்கிணைந்த குற்றப் பிரிவு தொடங்கப்பட்டு ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கை வேகப்படுத்தப்பட்டது. இதனால், கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் செயல்கள் குறையத் தொடங்கியுள்ளன.
கடந்தாண்டு பிற்பகுதியில் ரவுடி கொலைகள் எதுவும் நடைபெறவில்லை. ரவுடிகள் ஒழிப்பு பணியில் சிறப்பாகச் செயல்பட்ட ஒருங்கிணைந்த குற்றப்பிரிவைச் சேர்ந்த நுண்ணறிவு இணை ஆணையர் தர்மராஜன், துணை ஆணையர் சக்தி கணேசன் மற்றும் அப்பிரிவைச் சேர்ந்த காவல் அதிகாரிகளை காவல் ஆணையர் நேற்று நேரில் அழைத்துப் பாராட்டி, சான்றிதழ் வழங்கினார்.
இது தொடர்பாக காவல் ஆணையர் அருண் கூறுகையில், ``குற்றம் மற்றும் கொடூரமான குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்த குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொண்டதால் குற்றங்கள் குறைந்துள்ளன. குறிப்பாக 2022-ல் 469, 2023-ல் 714 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்தாண்டில் (2024) மட்டும் ரவுடிகள் 591 பேர், திருட்டு வழக்கில் சிக்கிய 76 பேர், போதைப் பொருள் வழக்கில் தொடர்புடைய 300 பேர் உட்பட மொத்தம் 1,302 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு காவல் ஆணையர் செய்திக்குறிப்பு வாயிலாக தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT