Published : 11 Jan 2025 06:14 AM
Last Updated : 11 Jan 2025 06:14 AM

வனப்பகுதியை விட்டு 3 கி.மீ.க்கு அப்பால் வரும் காட்டு பன்றிகளை சுடுவதற்கு வனத்துறைக்கு அதிகாரம்: அமைச்சர் பொன்முடி தகவல்

சென்னை: தமிழகத்தில் வனப்பகுதியை விட்டு 3 கிமீக்கு அப்பால் வரும் காட்டுப்பன்றிகளை சுடுவதற்கு வனத்துறையிருக்கு அதிகாரம் வழங்கி, அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று நேரமில்லா நேரத்தில், வனவிலங்குகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது ஜி.கே.மணி (பாமக) , கே.ஏ.செங்கோட்டையின் (அதிமுக) , ஜெகன்மூர்த்தி (புரட்சிபாரதம்), ரூபி.ஆர்.மனோகரன் (காங்கிரஸ்), ஏ.ஆர்.ஆர்.ரகுராம் (மதிமுக) தி.வேல்முருகன் (தவாக) மற்றும் ஐ.பி.செந்தில்குமார் (திமுக) ஆகியோர் பேசினர்.

அப்போது அவர்கள் யானை, சிறுத்தை, காட்டுப்பன்றி, மயில் உள்ளிட்ட வன விலங்குகள் மனிதர்களை தாக்குவது, விளை நிலைங்களை அழிப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

இவற்றுக்கு பதிலளித்து அமைச்சர் க.பொன்முடி பேசியதாவது: வனவிலங்குகளின் உயிர்களை பாதுகாப்பதிலும், அதே நேரத்தில் வனவிலங்குகளால் மனிதர்களுக்கு ஆபத்து, விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காட்டுப்பன்றிகளால் ஏற்படும் இன்னல் குறித்து உறுப்பினர்கள் பேசியுள்ளனர். மாவட்டங்களின் பொறுப்பு அமைச்சர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

முன்னதாக கடந்த 2023-ம் ஆண்டே, அமைச்சர் மதிவேந்தன் ஆலோசனையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழுவில் தலைமை வன பாதுகாவலர், தலைமை வன உயிர் பாதுகாவலர் , விவசாயிகளின் பிரதிநிதிகள், வருவாய், வேளாண், தோட்டக்கலைத்துறை, வன உயிரின ஆர்வலர்கள் என 19 பேர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டு, பரிந்துரைகள் அளித்தனர். அதன் அடிப்படையில் தமிழக முதல்வர் உத்தரவுப்படி, வனத்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுவரை மத்திய அரசு தான் வனவிலங்கு எது எது என்று அறிவிக்கும். அந்த விலங்குகள் பட்டியலில் காட்டுப்பன்றியும் இருக்கிறது. அதை விலக்குவது என்பது எளிதில் முடியாது. விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வைத்த கோரிக்கை அடிப்படையில், வெளியிடப்பட்டுள்ள அரசாணையின் படி, காப்புக்காட்டில் இருந்து ஒரு கிமீ., தொலைவில் உள்ள பகுதியில் காட்டுப்பன்றிகளை சுட அனுமதியில்லை.

அதே நேரம், ஒரு கிமீ முதல் 3 கிமீ தொலைவுக்குள் காட்டுப்பன்றி இருந்தால், அவற்றை பிடித்து மீண்டும் காட்டுக்குள் அனுப்ப வேண்டும். அதற்காக வனத்துறை அதிகாரிகள் தற்போது நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், அதிகமாக அப்பகுதிகளில் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்.

காப்புக்காட்டில் இருந்து 3 கிமீக்கு அப்பால் காட்டுப்பன்றி வருமானால் அதை சுடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் என்பதில் வேறுபட்ட கருத்து இல்லை.

சுடுவதற்காக வனத்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் சுட அதிகாரம் வேண்டு்ம் என்று கேட்கப்பட்டுள்ளது. எவ்வளவு விவசாயிகளிடம் துப்பாக்கி உரிமம் இருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. அவ்வாறு விவசாயிகளுக்கு அதிகாரம் அளித்தால் வனத்துக்கு உள்ளே சென்றும் சுடுவதற்கு வாய்ப்பு உள்ளது. இருந்தாலும் அது குறித்தும் முதல்வரிடம் கூறி, பரிசீலிக்கப்படும். காட்டுப்பன்றிகளால் ஏற்படும் சேதங்களை தடுக்க எல்லா நடவடிக்கைகளும் வனத்துறை எடுத்து வருகிறது.

யானைகளால் ஏற்படும் உயிர் சேதம், பயிர்ச்சேதம் ஏற்படுவதாக கூறினர். திண்டுக்கல் பகுதிகளில் யானையால் பிரச்சினை ஏற்பட்ட நிலையில், இரண்டு கும்கி யானைகள் அனுப்பப்பட்டன. அதுபோன்று நீலகிரிமாவட்டம் கூடலூரிலும் கும்கி ஆனைகளால் காட்டு யானைகள் விரட்டப்பட்டன. யானை புகா வண்ணம் அகழிகள் அமைக்கப்பட்டு, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மயில்களை பொறுத்தவரை தேசியப்பறவை. பல்வேறு திட்டங்கள் மூலம், தடுக்கப்படுகிறது.

இந்த ஆட்சியில்தான் மனித விலங்கு மோதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணம் இரண்டு முறை உயர்த்தி, ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்கப்படுகிறது. இந்த நிதியாண்டில் 5035 விவசாயிகளுக்கு, ரூ.10.55 கோடி நிவாரணம் விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிதியாண்டுக்கு ரூ.5 கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x