பெரியார் குறித்த கருத்தால் திடீர் சர்ச்சை: சீமான் மீது 11 மாவட்டங்களில் 62 வழக்குகள் பதிவு

பெரியார் குறித்த கருத்தால் திடீர் சர்ச்சை: சீமான் மீது 11 மாவட்டங்களில் 62 வழக்குகள் பதிவு
Updated on
1 min read

சென்னை/ மதுரை: பெரியார் குறித்து சீமான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், திக, திமுக, தபெதிக உள்ளிட்ட கட்சியினர் அளித்துள்ள புகார்களின் பேரில், 11 மாவட்டங்களில் சீமான் மீது 62 வழக்குகளை போலீஸார் பதிவு செய்துள்ளனர்.

நாம் தமிழர் கட்சியின் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெரியார் குறித்து தெரிவித்த கருத்துகள் சர்ச்சையாகின. இதைத் தொடர்ந்து, சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தை தபெதிகவினர் நடத்தினர். புதுச்சேரி நெல்லித்தோப்பில் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற சீமானுக்கு எதிராக திராவிட இயக்க அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திமுக சட்டத் துறை இணை செயலாளர் மருதுகணேஷ் புகார் கொடுத்தார். இதேபோல, தமிழகம் முழுவதும் சீமானுக்கு எதிராக திக, திமுக, தபெதிகவினர் புகார் கொடுத்து வருகின்றனர். அதன் அடிப்படையில், சென்னை உட்பட 11 மாவட்டங்களில் சீமான் மீது 62 வழக்குகளை போலீஸார் பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மதுரை கே.கே.நகரை சேர்ந்த ரமேஷ் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார். ‘‘பெரியார் குறித்து சீமான் கூறிய கருத்துகள் அவதூறானவை. சமூகஊடகங்களில் இது வேகமாக பரவுகிறது. சீமான் மீது வழக்கு பதிவு செய்ய கோரி அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் வழக்கு பதிவு செய்யவில்லை. எனது புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்ய போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று மனுவில் அவர் கூறியிருந்தார்.

இதை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், ‘‘சீமான் தெரிவித்த கருத்துகள் சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கும் வகையில் உள்ளன. எனவே, மனுதாரரின் மனுவை பெற்று போலீஸார் உரிய நடவடிக்கை எடுத்து, நீதிமன்றத்தில் 20-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in