

நீட் நுழைவுத் தேர்வு, டங்ஸ்டன் சுரங்க அனுமதி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கும் நேற்று கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று சொன்னீர்கள். ஆட்சிக்கு வந்து 4 ஆண்டு ஆகப்போகிறது. இன்னும் நீட் தேர்வு இருந்து கொண்டுதான் இருக்கிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். நாங்கள் ஆட்சியில் இருந்தபோதோ அடுத்து வந்த ஜெயலலிதா ஆட்சியின்போதோ நீட் தேர்வை அனுமதிக்கவில்லை. ஆனால், உங்கள் ஆட்சியில்தான் நீட் தேர்வு தமிழகத்துக்கு வந்தது. மத்திய அரசால்தான் அதை ரத்துசெய்ய முடியும். அதற்கான முயற்சிகள் நடக்கின்றன.
பழனிசாமி: ஆனால் நீங்கள்தான் தேர்தல் வாக்குறுதி அளித்தீர்கள். நீட் தேர்வு வருவதற்கு காரணமாக இருந்தது யார்?
ஸ்டாலின்: இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்துசெய்வோம். தமிழகத்துக்கு விதிவிலக்கு பெறுவோம்.
பழனிசாமி: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழாவுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அழைத்தீர்கள். திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே ரகசிய கூட்டணி உள்ளது. நீங்கள் இரட்டை வேடம் போடுகிறீர்கள்.
ஸ்டாலின்: நீங்கள் 4 வேடம் போடுகிறீர்கள். அந்த விழாவில் பங்கேற்குமாறு குடியரசுத் தலைவர், பிரதமருக்கும் அழைப்பு விடுத்திருந்தோம். அவர்களால் வர இயலவில்லை. அது கட்சி விழா அல்ல. அரசு விழா.
பழனிசாமி: நாங்கள் யாருக்கும் அடிமை அல்ல. யாருக்கும் வால் பிடிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. டங்ஸ்டன் சுரங்க ஏல அறிவிக்கைக்கு தமிழக அரசு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை?
ஸ்டாலின்: நாடாளுமன்றத்தில் மத்திய சுரங்க சட்டத்திருத்த மசோதா விவாதத்துக்கு வந்தபோது திமுக உறுப்பினர்கள், தோழமைக் கட்சியினரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். சபாநாயகரை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தியுள்ளனர். வெளிநடப்பும் செய்தனர். ஆனால், அதிமுக உறுப்பினர் அதற்கு ஆதரவாக பேசினார்.
பழனிசாமி: சுரங்கங்களுக்கு ஏல நடைமுறை கொண்டுவரும் நோக்கில் அதற்கு ஆதரவு தெரிவித்து அதிமுக உறுப்பினர் பேசினார். டங்ஸ்டன் திட்டத்துக்கு ஆதரவாக பேசவில்லை. சுரங்க ஏலம் தொடர்பான அறிவிக்கை வெளியிடப்பட்டு 10 மாதங்கள் என்ன செய்தீர்கள்?
அமைச்சர் துரைமுருகன்: உடனடியாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதினோம். அரசு துறையில் 10 மாத கடித போக்குவரத்து என்பது சாதாரணம். இவ்வாறு விவாதம் நடந்தது.
முன்னதாக பழனிசாமி பேசும்போது, "டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை எதிர்த்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்" என்றார். அதற்கு பதிலளித்த முதல்வர் பரிசீலிக்கப்படும் என்றார்.
முதல்வர் ஸ்டாலின் சவால்: சட்டப்பேரவையில் பழனிசாமி பேசும்போது, அண்ணா பல்கலைக்கழக மாணவி சம்பவத்தை குறிப்பிட்டார் தொடர்ந்து அவர் பேசும்போது, "அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் புகார் பெற்ற அடுத்த நாளே எப்ஐஆர் பதிவுசெய்யப்பட்டு 24 மணி நேரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்" என்றார்.
அப்போது முதல்வர் குறுக்கிட்டு, "அண்ணா பல்கலைக்கழக மாணவி சம்பவத்தில் புகார் அளித்த மறுநாளே எப்ஆர்ஐ பதிவுசெய்யப்பட்டு உடனடியாக ஒருவர் கைது செய்யப்பட்டார். குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பொள்ளாச்சி சம்பவத்தில் புகார் அளித்த 12 நாட்கள் கழித்தே எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. நான்சொல்வது தவறு என்றால் நீங்கள் சொல்லும் தண்டனையை ஏற்கிறேன். நீங்கள் சொல்வது தவறு என்றால் நான் சொல்லும் தண்டனையை ஏற்கத் தயாரா?" என்று சவால் விட்டார்.
ஆனால், அதற்கு பழனிசாமி பதில் அளிக்காமல், தொடர்ந்து பொள்ளாச்சி சம்பவத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பேசினார். இதனால் அவருக்கும் முதல்வருக்கும் இடையே மீண்டும் வார்த்தைப் போர் வெடித்தது. இதன் காரணமாக அதிமுக உறுப்பினர்கள் எழுந்து கூச்சல் எழுப்ப, பதிலுக்கு திமுகவினரும் கூச்சல் போட அவையில் பெரும் அமளி நிலவியது. பழனிசாமியின் இந்த பேச்சு சுமார் 3 மணி நேரம் வரை நீடித்தது.