Published : 11 Jan 2025 04:29 AM
Last Updated : 11 Jan 2025 04:29 AM
சட்டப்பேரவையில், 28 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கு தனி அலுவலர் நியமிப்பதற்கான சட்டத்திருத்த மசோதாவுக்கு அதிமுக, காங்கிரஸ், பாமக கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில், 28 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற்றது. அப்போது தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த ஜன.5ம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து தமிழக அரசு, அந்த ஊராட்சிகளை நிர்வகிக்க தனி அலுவலர்களை நியமித்து அரசாணை வெளியிட்டது.
இந்நிலையில், தனி அலுவலர்களை நியமிப்பதற்கு ஒப்புதல் அளிப்பதற்கான, ஊராட்சிகள் சட்டத்திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் நேற்று அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்தார். அந்த மசோதாவில், தமிழகத்தில் சில நகராட்சிகள், கிராம ஊராட்சிகளுடன் சேர்த்து மாநகராட்சிகளாக மாற்றப்பட்டுள்ளன. அவ்வாறு மாற்றப்பட்டதால், ஊராட்சி ஒன்றிய குழுக்கள், மாவட்ட ஊராட்சிகளில் கிராம ஊராட்சிகளின் மொத்த எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி எல்லை மறுவரையறை, இடஒதுக்கீடுகள் புதிதாக செயல்பட வேண்டியுள்ளது. இப்பணிகளை ஊராட்சிகளின் வழக்கமான தேர்தல்களுக்கு முன்னதாக செய்யப்பட வேண்டும்.
இதுதவிர 28 மாவட்டங்களின் அருகில் உள்ள சில கிராம ஊராட்சிகளை சேர்த்து பல்வேறு மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளை விரிவுபடுத்தும் திட்டங்களும் அரசின் பரிசீலனையில் உள்ளது. இதன்மூலம் மறுசீரமைப்பு, எல்லை மறுவரையறை, இடஒதுக்கீட்டுக்கு அதிக கால அவகாசம் தேவைப்படுகிறது. இந்த காரணங்களால் 28 மாவட்டங்களின் ஊராட்சிகளுக்கு வழக்கமான தேர்தல்கள் நடத்தப்படும் வரை அல்லது இந்தாண்டு ஜூலை 5-ம் தேதி இதில் எது முந்தியதோ, அதுவரை 28 மாவட்டங்களின் ஊராட்சிகளை நிர்வகிக்க தனி அலுவலர்கள் நியமிக்க, அரசுக்கு அதிகாரம் அளிக்க, ஊராட்சிகள் சட்டம் திருத்தம் செய்யப்படுகிறது. இதற்காக இந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இந்த சட்ட மசோதாவை அமைச்சர் தாக்கல் செய்த நிலையில், அறிமுக நிலையிலேயே அதிமுக, காங்கிரஸ், பாமக சார்பில் எதிர்ப்பு தெரிவித்தன. மசோதா மீது, சட்டப்பேரவையில் இன்று விவாதம் நடத்தப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT