Published : 11 Jan 2025 03:27 AM
Last Updated : 11 Jan 2025 03:27 AM
சென்னை: இஸ்லாமிய, கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களையும் அறநிலையத்துறையின் கீழ் இணைக்க செல்வப்பெருந்தகை வலியுறுத்துவாரா என இந்து தமிழர் கட்சி மாநில தலைவர் ராம ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக அரசியலில் நாள்தோறும் இந்து சமய அறநிலையத்துறையின் மீது ஏதேனும் ஒரு விவாதம் பரபரப்பாகி கொண்டிருக்கிறது. அந்தவகையில், இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு முறைகேடுகள் நடக்கிறது. இந்துக்களுக்கு எதிராக அந்த துறை செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் அண்ணாமலை, பாஜக ஆட்சிக்கு வந்தால், அறநிலையத்துறை என்ற ஒன்று இருக்காது என தொடர்ச்சியாக பேசி வருகிறார்.
அதேநேரம், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான், பல ஆண்டுகளாக திருப்பணிகள் மேற்கொள்ளப்படாமல் இருந்த கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. பல ஆயிரம் கோடிரூபாய் கோயில் சொத்துகள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்துமீட்கப்பட்டுள்ளது என கூறி வருகிறார்.
இந்நிலையில் தற்போது, இந்து சமய அறநிலையத்துறையின் பெயரை, தமிழ்நாடு அறநிலையத்துறை அல்லது திருக்கோயில் நலத்துறை என மாற்ற வேண்டும் என்று செல்வப்பெருந்தகை சட்டப்பேரவையில் வலியுறுத்தியிருப்பதற்கு, இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து இந்து தமிழர் கட்சி மாநில தலைவர் ராம ரவிக்குமார் கூறியதாவது: வரலாற்று பெட்டகங்களாக நிலைபெற்றிருக்கும் கோயில்களில், நிர்வாகத்தை மேற்பார்வையிட, கிழக்கிந்திய கம்பெனி காலத்தில் இருந்தே, கோயில்கள் அரசு ஆளுகையின் கீழ் இருந்ததாக வரலாறுகள் பதிவு செய்கின்றன. அக்காலத்தில், கோயில்கள் ஒரு சிலரின் கட்டுப்பாட்டில் இருந்ததால், கோயில்களை நிர்வாக மேற்பார்வையிடுவதற்காக ஆங்கிலேயர்கள் இத்துறையை ஏற்படுத்தினர்.
அந்தவகையில், இத்துறை கோயில்களின் நிர்வாகத்தை மட்டுமே மேற்பார்வையிட வேண்டும். ஆனால், அவர்கள் கோயில் வழிபாட்டில் தலையிடுகின்றனர். கோயில் வருமானத்தை சுரண்டுகின்றனர். கோயில் வருமானத்தை கோயில்களுக்கு செலவிடாமல் மற்ற விஷயங்களுக்காக செலவிடுகின்றனர். அனைத்து மதங்களுக்குமான அரசு என்றால், இஸ்லாமிய சமய அறநிலையத்துறை, கிறிஸ்தவ சமய அறநிலையத்துறைகளை உருவாக்கியிருக்க வேண்டும்.
ஆனால், இந்து கோயில்களை மட்டும் நிர்வாகம் செய்வதும், இஸ்லாமிய, கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களை கண்டுகொள்ளாமல் இருப்பதும் எந்த வகையில் நியாயம், இந்து கோயில்களைப் போல இஸ்லாமிய, கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்களை அறநிலையத் துறையின் கீழ் இணைக்க அரசிடம் செல்வப்பெருந்தகை வலியுறுத்துவாரா, அவரது பேச்சு, இந்து மதத்துக்கு எதிராக காங்கிரஸ் இருக்கிறது என்பதை தெளிவுப்படுத்துகிறது.
தமிழகத்தில் இப்போதையை சூழலில், இந்து சமய அறநிலையத் துறையின் பெயரை மாற்றுவது தான் அவர்களுக்கு பிரச்சினையா, இந்து சமய அறநிலையத்துறை பெயரில் இருந்து ஏன் ‘இந்து’ என்ற வார்த்தையை எடுக்க மும்முரம் காட்டுகிறார்கள். தமிழகத்தில் இருக்கும் கோயில்கள் அனைத்தும் மன்னர்களாலும், இந்துக்களாலும் உருவாக்கப்பட்டது. இந்துக்களின் மரபை அழிப்பதிலும், உடைப்பதிலும்தான் திமுக, காங்கிரஸின் சிந்தாந்தமாக உள்ளது. தமிழ்நாடு அறநிலையத்துறை என்ற பெயர் மாற்றத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வரதன் அனந்தப்பன் கூறும்போது, ‘இந்து அறநிலைத்துறையில் மொத்த சொத்து எவ்வளவு என்பதை ஏன் இதுவரை அறநிலையத்துறை வெளியிடவில்லை. நீதிமன்றங்களில் நடந்துவரும் வழக்குகளையும் விரைவாக நடத்தி இதுவரை மீட்கப்பட்ட சொத்துகள், இன்னும் மீட்கப்பட வேண்டிய சொத்துகள் எவ்வளவு என்பதை வெளியிட வேண்டும்.
அதேபோல், எல்லா சொத்துகளையும் எளிதாகக் கண்டுபிடிக்கும் வகையிலும், மோசடி பத்திரப்பதிவுகளை தடுக்கும் வகையிலும் எல்லா சொத்துகளுக்கும் ஒரே சர்வே எண், வலைதளத்தில் ஏற்படுத்தும் முறை எந்த அளவில் உள்ளது, வெளிநாட்டிலிருந்து எத்தனை சிலைகள் மீட்கப்பட்டுள்ளன, இந்து சமயத்தினை வளர்க்கும் பொருட்டு புதிதாக வெளியிடப்பட்டுள்ள நூல்கள் எத்தனை?
எத்தனை பழமையான இந்து சமய நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன, எத்தனை நூல்கள் கணினிமயமாக்கப்பட்டுள்ளன என்பதையும் பொது வெளியில் வெளியிட வேண்டும். மேலும், தமிழக அரசின் தகவல் அறியும் உரிமை சட்ட வலைதளத்தில், எந்த ஒரு இந்து அறநிலையத்துறை அதிகாரியின் அலுவலகமும் இணைக்கப்படவில்லை. அதையும் இணைக்க வேண்டும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT