

கோவை: பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி, கோவையிலிருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளில் வழக்கத்தை விட கூடுதல் கட்டணம் நிர்ணயித்து வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. கோவையில் இருந்து சென்னை, பெங்களூரு, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்செந்தூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு தொலைதூர வழித்தடங்களுக்கு 300-க்கும் மேற்பட்ட பேருந்துகள் தினமும் இயக்கப்படுகின்றன.
பொங்கல் பண்டிகையையொட்டி, வரும் 11-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை தொடர் விடுமுறை வருகிறது. கோவையில் வசிக்கும் வெளியூர்களைச் சேர்ந்த மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். பெரும்பாலான பொதுமக்கள் நேர வசதி, இருக்கை வசதி, இரவு ஏறினால் அதிகாலையில் சொந்த ஊரில் இறங்கிவிடலாம் என்பன போன்ற சாதகமான காரணங்களால் ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்வதற்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
இதை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் கட்டண விகி்தம் தாறுமாறாக உயர்ந்துள்ளதாக பயணிகள் புகார் கூறுகின்றனர். இதுகுறித்து, கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் நுகர்வோர் அமைப்பின் செயலாளர் நா.லோகு கூறும்போது, ‘‘வழக்கமான நாட்களில் ஆம்னி பேருந்துகளில் கோவையிலிருந்து சென்னைக்கு ரூ.700 முதல் ரூ.1000 வரையும், திருநெல்வேலிக்கு ரூ.400 முதல் ரூ.1,050 வரையும், தூத்துக்குடிக்கு ரூ.450 முதல் ரூ.900 வரையும், தஞ்சாவூருக்கு ரூ.400 முதல் ரூ.600 வரையும், புதுச்சேரிக்கு ரூ.500 முதல் ரூ.1000 வரையும், நாகப்பட்டினத்துக்கு ரூ.400 முதல் ரூ.600 வரையும், பொன்னமராவதிக்கு ரூ.400 முதல் ரூ.700 வரையும் வசூலிக்கப்படுகிறது.
தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. கோவையிலிருந்து சென்னைக்கு ரூ.1,000 முதல் ரூ.3,000 வரையும், திருநெல்வேலிக்கு ரூ.1,000 முதல் ரூ.2,100 வரையும், பெங்களூருக்கு ரூ.850 முதல் ரூ.2,500 வரைக்கும், தூத்துக்குடிக்கு ரூ.1,100 முதல் ரூ.2,500 வரையும், தஞ்சாவூருக்கு ரூ.850 முதல் ரூ.1,800 வரைக்கும் என கட்டணம் அதிகரித்து வசூலிக்கப்படுகிறது.
சாதாரண மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல பல ஆயிரம் செலவழிக்க வேண்டியுள்ளது. ஆம்னி பேருந்துகளுக்கு கிலோ மீட்டர் அடிப்படையில் அரசு கட்டணம் நிர்ணயிக்க வேண்டும். தற்போது பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
இன்று முதல் 10 நாட்களுக்கு சோதனை: இதுகுறித்து கோவை மண்டல வட்டாரப் போக்குவரத்து இணை ஆணையர் அழகரசு கூறும்போது, ‘‘ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலித்தால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதித்தல், பெர்மிட் ரத்து, பேருந்து பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இதுதொடர்பாக கண்காணிக்க, அந்தந்த ஆர்.டி.ஓ தலைமையில் கோவையில் சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று முதல் 10 நாட்களுக்கு தொடர்ச்சியாக முக்கிய இடங்களில் ஆம்னி பேருந்துகளில் தணிக்கை செய்யப்படும். கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப் பட்டிருந்தால் பயணிகள் உரிய விவரங்களுடன் புகார் அளிக்கலாம்’’ என்றார்.
கோவை மாவட்ட நிர்வாகத்தினர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘பொதுமக்கள், ஆம்னி பேருந்துகளின் முறையற்ற இயக்கம், கூடுதல் கட்டணம், பிற இனங்களில் புகார்கள் ஏதும் இருந்தால் சியுஜி எண் 9384808304 என்ற வட்டாரப் போக்குவரத்து அலுவலக வாட்ஸ் அப் எண்ணில், புகார்தார் பெயர், தொலைபேசி எண், பயணம் செய்யும் தேதி, செல்லும் இடம், டிக்கெட்டின் புகைப்படம், கட்டண விவரம், பேருந்து எண் மற்றும் பெயர் ஆகியவற்றுடன் புகார் தெரிவித்து தீர்வு பெறலாம்’’ எனக் கூறப்பட்டுள்ளது.