Published : 18 Jul 2018 08:27 AM
Last Updated : 18 Jul 2018 08:27 AM

சுகாதாரத்துறை சார்பில் ரூ.38 கோடியில் மருத்துவமனை கட்டிடங்கள்: முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்

சுகாதாரத் துறை சார்பில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங் களில் ரூ.38 கோடியே 22 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனை கட்டிடங்களை முதல்வர் கே.பழனிசாமி திறந்து வைத்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் ரூ.28 கோடியே 10 லட்சம் மதிப்பில் 200 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, தேர்வுக்கூடம், மாணவர்களுக்கான விடுதி மற்றும் பல்வேறு கல்லூரி கட்டிடங்களை முதல்வர் கே.பழனிசாமி திறந்து வைத்தார்.

மேலும், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை ஆகியவற்றில் தலா ரூ.1 கோடி மதிப்பிலான தொடக்கநிலை இடையீட்டு சேவைகள் மைய கட்டிடங்கள், அரசு ராஜாஜி மருத்துவமனையில் ரூ.78 லட்சத்தில் தீவிர மருத்துவ சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைக்குப்பின் கவனிப்பு கூடுதல் கட்டிடங்களையும் திறந்து வைத்தார். இவை தவிர, நாகை, கடலூர், விருதுநகர், அரியலூர், நெல்லை, திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் சுகாதாரத் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள பல்வேறு கட்டிடங்கள் என ரூ.38 கோடியே 22 லட்சம் செலவிலான கட்டிடங்களையும் அவர் திறந்து வைத்தார்.

மேலும், விருதுநகர், நெல்லை, சென்னை ஸ்டான்லி, மதுரை ராஜாஜி மருத்துவமனைகளில் ரூ.6 கோடியே 92 லட்சத்தில் நிறுவப்பட்டுள்ள சிடி ஸ்கேன் கருவிகள், ஸ்டான்லி மருத்துவ மனையில் ரூ.4 கோடியே 92 லட்சத்தில் நிறுவப்பட்டுள்ள எம்ஆர்ஐ ஸ்கேன், சென்னை ஸ்டான்லி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனை, திருச்சி மகாத்மா காந்தி நினைவு மருத்துவமனை, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் ரூ.12 கோடியே 24 லட்சத்தில் நிறுவப் பட்டுள்ள கேத் லேப் கருவிகள் சேவையையும் முதல்வர் கே.பழனி சாமி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சேவூர் ராமச் சந்திரன், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், மருத்துவப் பணிகள் கழக மேலாண் இயக்குநர் பி.உமாநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x