

மேட்டூர் / சென்னை: திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த மேச்சேரி பெண்ணுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், மல்லிகா குடும்பத்தினருக்கு அனைத்துக் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மேச்சேரியை அடுத்த தாசனூர் காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் மல்லிகா (55). இவரது கணவர் கிருஷ்ணன் (58), மேச்சேரி பேரூராட்சியில் தற்காலிக டேங்க் ஆபரேட்டராகப் பணிபுரிகிறார்.
இந்நிலையில், மல்லிகா, கிருஷ்ணன் உள்பட 14 பேர் திருப்பதிக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றிருந்தனர். சொர்க்கவாசல் திறப்புக்கு இலவச டோக்கனை வாங்க முற்பட்டபோது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மல்லிகா உயிரிழந்தார். அவரது உடல் திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில், “உயிரிழந்த மல்லிகாவின் உடலை சொந்த ஊருக்குக் கொண்டுவர அனைத்து ஏற்பாடுகளையும் அரசு சார்பில் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மல்லிகா குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
தலைவர்கள் இரங்கல்: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த மேச்சேரி பெண் உள்ளிட்ட அனைத்து பக்தர்களின் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கல்” என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், வி.கே.சசிகலா மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.