அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு அனைத்து சமூகத்தினர் கொண்ட குழு அமைக்க கோரி வழக்கு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

மதுரை: மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு அனைத்து சமூகத்தினர் கொண்ட குழு அமைக்கக்கோரிய வழக்கில் மதுரை ஆட்சியர் விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தை சேர்ந்த கல்யாணசுந்தரம் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில், “மதுரை அவனியாபுரத்தில் ஒவ்வொரு ஆண்டும் தை முதல் நாள் ஜல்லிக்கட்டு நடைபெறும். அனைத்து சமுதாயத்தினரின் பங்களிப்புடன் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். கடந்த 2023-ம் ஆண்டு கண்ணன் என்பவர் தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் எனும் சங்கத்தை பதிவு செய்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான உரிமையை கோரினார். இந்த சங்கத்தில் அவரது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மட்டுமே உறுப்பினர்களாக உள்ளனர்.

ஜல்லிக்கட்டு குழுவில் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்பதை தடுத்து வருகிறார். அமைதி பேச்சுவார்த்தையில் பட்டியல் சமூகத்தினருடன் சமமாக அமர்ந்து ஜல்லிக்கட்டு நடத்த தேவை இல்லை என தெரிவித்தார். கடந்த ஆண்டு இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் தமிழர்களின் கலாச்சார விழாவான ஜல்லிக்கட்டை அனைத்து சமூகத்தினரும் இணைந்து நடத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

பல இடங்களில் ஜல்லிக்கட்டுகளில் பங்கேற்க பட்டியல் சமூகத்தினரை அனுமதிப்பதில்லை. பட்டியல் சமூகத்தினரை தவிர்த்து ஜல்லிக்கட்டை நடத்துவது இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது. ஆகவே அனைத்து சமூகத்தினரையும் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை அமைத்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்த உத்தரவிட வேண்டும்,” என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி. மரிய கிளாட் அமர்வு, கடைசி நேரத்தில் நிவாரணம் கோரினால், எவ்வாறு வழங்குவது? என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, வழக்கு தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாநகர காவல்துறை ஆணையர் ஆகியோரிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கை வெள்ளிக்கிழமைக்கு (ஜன.10) ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in