

விழுப்புரம்: செஞ்சி அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் இன்று மாலை செஞ்சி தமிழ்ச்சங்கம் 13-ம் ஆண்டு தமிழ்ச் சங்கம் தமிழர் திருநாள் பொங்கல் விழா நடைபெற்றது. இவ்விழாவில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் பங்கேற்று பேசியது:
“வடமாநிலத்தவர் தங்களின் தாய்மொழியான இந்தியை சரளமாக வெட்கப்படாமல் பேசுகிறார்கள். மண்ணை மறக்கக் கூடாது கூடவே தாய் மொழியை மறக்கவே கூடாது. நாம்தான் தாய் மொழியை விட அரைகுறை ஆங்கிலத்தில் பேசுவதை பெரிதாக எண்ணுகிறோம். தமிழ் பேசினால் அது தாழ்வு என்ற எண்ணம் பலரிடம் உள்ளது. ஆங்கிலம் தெரியாமல் இருப்பதை தாழ்வாக எண்ணுவது தமிழர்கள் மட்டுமே. இந்த உளவியலை நாம் பெற்றுள்ளோம்.
நான் மக்களவையில் பார்க்கும் எம்பிக்கள் தங்கள் தாய் மொழியில் பேசுகிறார்கள். மனிதன் ஆதிகாலத்தில் பேசிய மொழியை வாழ்க்கை முழுவதும் தலைமுறை தலைமுறையாக பேசி இலக்கணம் வரையறுக்கலாம். அதற்கு அம்மொழி தொடர்ந்து பேசப்பட்டு, அதன் குறைகள் நீங்கி, இலக்கிய வளத்தை எட்டுகிறது. திருக்குறள், சிலப்பதிகாரம், கம்பராமாயணம் இதற்கு எடுத்துக்காட்டு. இப்படி ஒவ்வொரு மொழியிலும் சிறப்பு உண்டு.
காலத்தால் முந்தையது, பிந்தையது என்ற வேறுபாடு உண்டு. உலகின் பழ மொழிகளுக்கு எழுத்துருவம் கிடையாது. உதாரணமாக நம் ஊர் நரிக்குறவர்கள் பேசும் மொழி. அதே போல மலாய் மொழியை அம்மக்கள் ஆங்கிலத்தில்தான் எழுதுகிறார்கள். பழங்குடி பேசும் மக்களுக்கு எழுத்துரு கிடையாது. இந்தி எதிர்ப்பு போராட்டம் நடக்காமல் இருந்திருந்தால் நாம் இந்தி பேசி இருப்போம். தமிழ் நூல்கள் இருக்கும். தமிழ் பேசுபவர்கள் இருக்கமாட்டார்கள். பல ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் அழியாமல் தமிழ் மொழி உள்ளது.
இஸ்லாமியர்கள் 800 ஆண்டுகள் ஆட்சி செய்தாலும் தமிழ் மொழி உயிர்ப்புடன் இருந்தது. ஒரு மொழி இளமையாக இருக்க காலத்திற்கேற்ப புதிய புதிய சொற்களை உருவாக்கி மறுபடி இளமையாக உள்ளது தமிழ் மொழி. மொழியை வளப்படுத்த தமிழ் சங்கம் என்ற பெயரில் மொழியை வளர்த்துள்ளனர். குமரிக்கு பின்பும் தமிழ் வளர்ந்துள்ளதை தென் மதுரை என்று இலக்கியம் சொல்கிறது. 4400 ஆண்டுகள் அங்கு தமிழ் சங்கம் இயங்கியதாக சொல்கிறார்கள். செஞ்சி தமிழ் சங்கம் 13 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.
கபடாபுரத்தில் இடைசங்கம் 3700 ஆண்டுகள் இருந்துள்ளது. திருக்குறளை ஒரு மதத்திற்குள் உட்படுத்த முடியாது. அதனால்தான் உலகின் பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஔவை என்றால் மூதாட்டி. அது ஒளவையின் பெயர் அல்ல. அணு என்ற பெயரை முதன் முதலில் பயன்படுத்தியவர் ஔவை. உடை உடுத்துவது அல்ல நாகரீக வளர்ச்சி. அறிவை வளர்ப்பதே நாகரீக வளர்ச்சியாகும். பொங்கல் மதம் சார்ந்த பண்டிகை இல்லை” இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத்தலைவர் ரங்கபூபதி, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் செஞ்சி சிவா, விசிக நிர்வாகிகள் பெரியார், சேரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “யுஜிசியின் புதிய விதிகள் மிக அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக உள்ளது. துணைவேந்தர், பேராசியர் நியமனம் ஆகியவற்றில் மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்பது தெரியவருகிறது. கல்வித்தகுதி ஒரு பொருட்டல்ல, தலைமைத்துவமும், நிர்வாகத்துவமும் இருந்தால் போதும் என்ற நிலைய கொண்டு வந்து ஆர் எஸ் எஸ் இயக்கத்தினரை உள்ளே கொண்டுவர திட்டமிட்டுள்ளார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது சனாதன சதி என்றே விசிக கருதுகிறது. இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்றும், இதை திரும்ப பெறவேண்டும் என வலியுறுத்துகிறேன். பாலாற்றில் தடுப்பணை கட்ட முடியாது. தமிழக மக்கள் அதை அனுமதிக்க மாட்டார்கள்” என்றார்.