

ராமேசுவரம்: ஹெச்எம்பி வைரஸையும் கரோனாவையும் ஒப்பிடக் கூடாது என தேசிய காசநோய் ஒழிப்பு திட்ட முதன்மை ஆலோசகரான சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
ராமேசுவரம் அருகே தங்கச்சிமடத்தில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் மீன் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் சார்பாக கடலோரப் பகுதிகளில் கடலில் பிளாஸ்டிக் மாசு தடுப்பு நடவடிக்கைகளை மீனவர்களுடன் இணைந்து நடைமுறைப்படுத்தி வருகின்றது. அவற்றின் ஒரு பகுதியாக கடலில் தூக்கி எறியப்பட்ட வீணான மீன்பிடி வலைகள், பயன்படாத கயறுகள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள், மிதவைகளைக் கொண்டு கைவினை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி மீனவ மகளிர்க்கு அளிக்கப்படுகிறது.
இதில் பயிற்சி பெற்ற மீனவ மகளிர்கள் வடிவமைத்த கைவினைப் பொருட்கள், சுவர் தொங்கல்கள், மேசை விரிப்புகள், மிதியடி போன்றவற்றை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை தங்கச்சிமடத்தில் நடைபெற்றது. இதனை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவரும், தேசிய காசநோய் ஒழிப்பு திட்ட முதன்மை ஆலோசகராக சவுமியா சுவாமிநாதன் அறிமுகப்படுத்தினார்.
நிகழ்ச்சியில் சவுமியா சுவாமிநாதன் பேசியது: “கடலில் பிளாஸ்டிக் கழிவுகள் கலப்பது நாள்தோறும் அதிகரித்து வருவதால் 2050ம் ஆண்டில் கடலில் மீன்களை காட்டிலும் பிளாஸ்டிக் கழிவுகள் தான் அதிகம் இருக்கும். கண்களுக்கு தெரியாத மைக்ரோ பிளாஸ்டிக்களை மீன்கள் உண்டு, அவற்றை நாம் உண்டால் கேன்சர் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் மனிதர்களுக்கு ஏற்படலாம். மைக்ரோ பிளாஸ்டிகினால் ஏற்படும் தீங்குகள் குறித்து ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கடலில் குப்பையாக போடப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு மீண்டும் பயன்படுத்தும் வகையில் கைவினைப் பொருட்களாக மீனவ பெண்கள் தயாரித்துள்ளனர். இதன் மூலம் கடலில் கலக்கும் பிளாஸ்டிக் பங்கினை சிறிதளவாவது குறைக்க முடியும் என்பதுடன் மீனவப் பெண்களுக்கு வருமானமும் கிடைக்கும்”: என்றார்.
பின்னர் ஹெச்எம்பி வைரஸ் பரவல் குறித்து அவர் செய்தியாளர்களுக்கு கூறியது: “சீனாவில்கூட ஹெச்எம்பி வைரஸ் பாதிப்பு அதிகளவில் இல்லை. கரோனாவையும் இதையும் ஒப்பிடக் கூடாது. ஹெச்எம்பிவி வைரஸ் சாதாரணமாக சளி, இருமல் போன்றவை ஏற்படுத்தக்கூடியது. குளிர் காலத்தில் வரக்கூடிய இருமல், சளி ஆகியிவற்றால் பாதிக்கப்பட்டால் துளசி, இஞ்சி எடுத்துக் கொள்ளலாம். மாஸ்க் அணிந்து கொள்ளலாம். கைகளை நன்கு கழுவ வேண்டும், கூட்டத்தை தவிர்க்க வேண்டும். பாதிப்பு அதிகமாக இருந்தால் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்” என்றார்.
இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்ட வன உயிரின காப்பாளர் முருகன், மீனவப் பிரதிநிதிகள் சேகு, ராயப்பன், சகாயம், எம்.எஸ். சுவாமிநாதன் அறக்கட்டளையின் இயக்குநர்கள் ரங்கலெட்சுமி, வேல்விழி ஆகியோர் கலந்து கொண்டனர்.