திமுக அமைப்புச் செயலாளர் கல்யாணசுந்தரம் திடீர் சஸ்பெண்ட்: புதிய செயலாளராக ஆர்.எஸ்.பாரதி நியமனம்

திமுக அமைப்புச் செயலாளர் கல்யாணசுந்தரம் திடீர் சஸ்பெண்ட்: புதிய செயலாளராக ஆர்.எஸ்.பாரதி நியமனம்
Updated on
1 min read

திமுகவின் அமைப்புச் செயலாளராக இருந்த பெ.வீ.கல்யாணசுந்தரம் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். புதிய அமைப்புச் செயலாளராக ஆர்.எஸ்.பாரதி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திமுக அமைப்புச் செயலாளர் பெ.வீ.கல்யாணசுந்தரம், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதாக அறிவதால், அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்.

கல்யாணசுந்தரத்துக்கு பதிலாக, புதிய அமைப்புச் செயலாளராக ஆர்.எஸ்.பாரதி நியமிக்கப்படுகிறார். கட்சி நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் இவருடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அறிக்கையில் அன்பழகன் கூறியுள்ளார்.திமுக தலைவர் கருணாநிதிக்கு, கடந்த மாதம் 30-ம் தேதி பெ.வீ.கல்யாணசுந்தரம் ஒரு கடிதம் எழுதியதாகத் தெரிகிறது. ‘திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை 2016-ம் ஆண்டு நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும். திமுகவில் இருந்து கனிமொழி, ராசா, தயாநிதி மாறன் ஆகியோர் ஒதுங்கி இருக்க வேண்டும். புதிதாக பிரிக்கப்பட்ட 65 மாவட்டங்களுக்கும் உடனடியாக புதிய பொறுப்பாளர்கள் நியமிக்க வேண்டும்.

ஒன்றிய, நகர மற்றும் மாவட்டச் செயலாளர்களை இரண்டு முறைக்குமேல் போட்டியிட அனுமதிக்கக் கூடாது. இது உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும். நில அபகரிப்புப் புகார் மற்றும் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கட்சியினர் எந்த முக்கியப் பொறுப்பும் வகிக்கக் கூடாது. தற்போது நான் வகித்து வரும் அமைப்புச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன்’ என்று கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in