

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் பொங்கல் பண்டிகை மற்றும் விடுமுறை நாட்கள் தவிர்த்து, ஜனவரி 10, 13 மற்றும் 17 ஆகிய 3 நாட்கள் மட்டுமே வேட்பு மனுத்தாக்கல் செய்ய இயலும், என மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்தார். ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு பிப்ரவரி 5-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இதன்படி, ஈரோடு மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் அறைகள் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டன.
தொகுதியில் உள்ள அரசு அலுவலகங்களில் முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்களின் புகைப்படங்கள் அகற்றப்பட்டன. ஈரோடு கிழக்கில் பன்னீர் செல்வம் பூங்காவில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி, அண்ணா உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளை மூடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இடைத்தேர்தலை ஒட்டி கட்சிக்கொடிகம்பங்கள், அரசியல் கட்சிகளின் பேனர்களை அகற்றும் பணிகளும் தொடங்கியுள்ளன.
இதுகுறித்து, ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜகோபால் சுன்கரா கூறியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் சோதனை பணிக்காக மூன்று பறக்கும் படை, மூன்று நிலை கண்காணிப்புக் குழு மற்றும் தலா ஒரு வீடியோ மற்றும் தணிக்கை குழு ஆகிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர் சுழற்சி முறையில் சோதனை மேற்கொள்வர். தேர்தல் தொடர்பாக
சி-விஜில் செயலி மற்றும் 1950 எண் மூலம் புகார்களைத் தெரிவிக்கலாம். உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாகவோ, பரிசுப்பொருட்களை மொத்தமாகவோ எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்யப்படும். வாக்காளர்கள், தங்களது பெயர், வேட்பாளர் பட்டியலில் உள்ளதா என சரி பார்த்து கொள்ள வேண்டும்.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் விதிமுறைகளின்படி, சுவர் விளம்பரம், அரசியல் கட்சி கொடிக் கம்பங்கள் அகற்றப்படும். அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் ஊடகங்கள் உள்ளிட்டவற்றில் விளம்பரம் செய்வதற்கு முன்பு தணிக்கை சான்று பெறுவது அவசியம்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர், பொங்கல் பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களைத் தவிர்த்து, ஜனவரி 10, 13 மற்றும் 17 ஆகிய 3 நாட்கள் மட்டுமே வேட்பு மனுத்தாக்கல் செய்ய இயலும். ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மதியம், 3 மணி வரை மனு தாக்கல் செய்யலாம். பிப்ரவரி 5-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், பிப்ரவரி 8-ம் தேதி சித்தோடு அரசு பொறியியல் கல்லுாரி வளாகத்தில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும்.
இடைத்தேர்தலில் வாக்காளர்கள் அடைத்து வைத்தல் உள்ளிட்ட புகார்கள் வந்தால், முறையான நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த இடைத்தேர்தலில் மத்திய ஆயுதப்படை காவல்துறையினர் 5 குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இம்முறை பதற்றமான வாக்குசாவடிகளைக் கண்டறிந்த பின்பு, தேவையின் அடிப்படையில், மத்திய ஆயுதப்படை காவல்துறையினரின் பாதுகாப்பு கோரப்படும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, ஈரோடு எஸ்.பி., ஜவகர், மாநகராட்சி ஆணையர் மணீஷ் ஆகியோர் உடனிருந்தனர்.