ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும்: அண்ணாமலை கோரிக்கை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும்: அண்ணாமலை கோரிக்கை
Updated on
1 min read

சென்னை: வெளிமாநில அதிகாரிகளை கொண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை வைக்கவிருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த முறை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின்போது திமுகவினர் ஜனநாயகத்தை புதைகுழியில் புதைத்தனர். அப்படி இல்லாமல் இந்த முறை நியாயமாக அரசமைப்புச் சட்டப்படி தேர்தலை நடத்துவார்கள் என நம்புகிறோம். கூட்டணித் தலைவர்களிடம் பேசி இடைத்தேர்தலில் பாஜகவின் அணுகுமுறை தொடர்பாக அறிவிக்கிறோம்.

கடந்த முறை தேர்தல் அதிகாரிகள் சரியாக வேலை செய்யவில்லை. இதனால் வெளியில் இருந்து சிறப்பு அதிகாரிகளை அனுப்பி அவர்கள் மூலம் தேர்தலை நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை வைக்கவிருக்கிறோம். திமுகவின் படைபலத்தின் கொட்டத்தை அடக்க வேண்டுமானால் தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும்.

தனது பிறந்தநாளையொட்டி ஒட்டப்பட்ட போஸ்டரால் கனிமொழி பிரச்சினையில் சிக்கியுள்ளார். அதில் இருந்து விடுபடவே ஆளுநர் குறித்து கனிமொழி விமர்சிக்கிறார். அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் இருந்து தப்ப முதல்வர் ஆளுநரை பயன்படுத்துகிறார்.

இதுபோல் ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் பிரச்சினையில் இருந்து தப்பிக்க ஆளுநரை பகடைகாயாக பயன்படுத்துகின்றனர். அறிவிக்கப்படாத அவசர நிலை இருப்பதாக கம்யூனிஸ்ட் கட்சியினர் கூறியதை நான் மீண்டும் நினைவுகூருகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in