

சென்னை: மதுரையில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக விவசாயிகள் நடத்திய பேரணிக்கு காவல் துறை அனுமதி மறுத்ததற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் சார்பில் நடைபெற்ற பேரணிக்கு அனுமதி மறுத்த காவல் துறைக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். அடிப்படை ஜனநாயக உரிமையான போராட்டம் நடத்த அனுமதி மறுப்பதும், மீறி போராடி
னால் காவல் துறையைக் கொண்டு அடக்குமுறையை கையாள்வதும் ஏற்கத்தக்கதல்ல” என்று தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் விவசாயிகளைத் தடுத்து நிறுத்த முற்படுவது, டங்ஸ்டன் சுரங்கத்தைக் கைவிடும் எண்ணம் திமுகவுக்கு இல்லை என்பதையே காட்டுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா ஆகியோர் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்துள்ளனர்.
அமைச்சர் ரகுபதி விளக்கம்: அமைச்சர் எஸ்.ரகுபதி நேற்று வெளியிட்ட அறிக்கையில், “பொதுமக்கள் போராட்டம் நடத்த அனுமதி வழங்கிய காவல் துறை, சில கட்டுப்பாடுகளை விதித்தது. அதைத்தான் ‘காவல்துறை அனுமதி மறுத்துள்ளது’ என பழனிசாமி பொய்கூறியுள்ளார். தமிழக உரிமையை மத்திய அரசின் காலடியில் வைத்துவிட்டு, பழனிசாமி செய்த துரோகத்தை மக்கள் மறக்கமாட்டார்கள். அவர் அதிமுக பொதுச் செயலாளர் என்பதை மறந்து, பாஜக தலைவரைப்போல செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.