

சென்னை: அரசு மருத்துவமனைகளுக்கு சிறப்பு மருத்துவர்களை வாடகைக்கு எடுக்காமல் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அரசு மருத்துவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது தொடர்பாக அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை வெளியிட்ட அறிக்கையில், “திருவண்ணாமலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக செங்கம் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் சுமார் 400-க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் மற்றும் உள் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதோடு, மாதம் 60 முதல் 70 பிரசவங்கள் நடைபெறுகிறது. சீமாங் மருத்துவமனை எனப்படும் ஒருங்கிணைந்த தாய் சேய் நல மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்ட இந்த மருத்துவமனையில் குறைந்தது 6 மகப்பேறு மருத்துவர்கள், 6 குழந்தைகள் நல மருத்துவர்கள் மற்றும் 6 மயக்கவியல் நிபுணர்கள் இருக்க வேண்டும்.
ஆனால் இல்லை. அதுவும் 13 மருத்துவர் பணியிடங்கள் இருந்தும் தலைமை மருத்துவர் மட்டுமே உள்ளார். பயிற்சிக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மகப்பேறு துறையில் இருந்து முதுகலை மருத்துவ மாணவி இங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தலைமை மருத்துவர் மற்றும் பயிற்சி மருத்துவர் மட்டுமே தான் இந்த மருத்துவமனையில் பணி செய்வதால், அவர்களுக்கு பணிச்சுமை மிகவும் அதிகமாக உள்ளது.
பொதுவாக துறை அனுபவம் உள்ள சிறப்பு மருத்துவரின் கீழ் பணியாற்றினால் தான் முதுகலை மருத்துவ மாணவர்கள் கற்றுக்கொள்ள முடியும். மக்களுக்கும் உரிய சிகிச்சை அளிக்க முடியும். ஆனால் பயிற்சியில் இருக்கும் மருத்துவர்களை மூத்த மருத்துவர்களின் வழிகாட்டுதல் இல்லாமல், அதுவும் மகப்பேறு துறையில் சிகிச்சை அளிப்பதை எப்படி நியாயப்படுத்த முடியும்.
பாரபட்சமின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் தரப்பட வேண்டிய மருத்துவ சேவை, இப்பகுதி மக்களுக்கு மறுக்கப்படுவது சமூக நீதியா?. இந்த செங்கம் அரசு மருத்துவமனையில் தற்போது TAEI வார்டுக்காக புதிய கட்டடம் கட்டுவதற்கான வேலை துரிதமாக நடந்து வருகிறது. ஏற்கெனவே போதிய மருத்துவர்களையும், செவிலியர்களையும் இங்கு நியமிக்காமல், கட்டிடம் கட்டுவதற்கும், உபகரணங்கள் வாங்குவதற்கு மட்டும் அரசு முனைப்பு காட்டுவது ஏன் என்ற கேள்வியை தான் அப்பகுதி மக்கள் கேட்கின்றனர்.
சென்னை ஆர்எஸ்ஆர்எம் மகப்பேறு மருத்துவமனையில் மகப்பேறு துறையில் 10 உதவி பேராசிரியர் பணி இடங்களும், எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் 9, அரசு திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு துறையில் 27 இடங்களில் 20 இடங்கள் காலியாக உள்ளன. வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மகப்பேறு துறையில் 21 உதவி பேராசிரியர் இடங்கள் காலியாக உள்ளன. இதேபோல், பெரும்பாலான அரசு மருத்துவமனைகளின் நிலை உள்ளது.
தமிழகத்தில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட மருத்துவர்கள் உள்ளனர். சிறப்பு மருத்துவர்கள் மற்றும் உயர் சிறப்பு மருத்துவர்கள் அதிகமாக உருவாக்கப்பட்டுள்ள மாநிலமும் தமிழகம் தான். ஆனால் 19 ஆயிரம் அரசு மருத்துவர் பணியிடங்கள் மட்டுமே உள்ளன. அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை இருப்பதற்கு காரணம், அரசு போதிய அக்கறை காட்டாதது தான்.
அதைப்போல தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கு நாட்டிலேயே மிகவும் குறைவான ஊதியம் தரப்படுவதால் பல மருத்துவர்கள் அரசுப்பணியில் தொடர முடியாமல் விலகி விடுகின்றனர். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கொள்கைப்படி மாவட்டத்துக்கு ஒரு அரசு மருத்துவ கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்தால்தான் சுகாதாரத்துறையை தொடர்ந்து வலுவாக வைத்திருக்க முடியும் என்ற உன்னத நோக்கத்தில், 2009-ம் ஆண்டு கருணாநிதி வெளியிட்ட அரசாணை 354-க்கு திமுக அரசு தடை போட்டுள்ளது தான் வருத்தமான உண்மை. அரசாணைப்படி மருத்துவர்களுக்கு அதிகபட்ச பலன்கள் கிடைக்கும் வகையில் உடனே நடைமுறைப்படுத்த வேண்டும்.
இதற்கிடையே சிறப்பு மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ள மருத்துவமனைகளில் வாடகைக்கு அழைத்து கொள்ளும் வகையில் அரசு உத்தரவிட்டுள்ளது. சிறப்பு மருத்துவர்களை வாடகைக்கு எடுத்து கொள்வது வலுவான கட்டமைப்பை கொண்டுள்ள தமிழக சுகாதாரத் துறைக்கு நல்லதல்ல. திமுக ஆட்சி அமைந்து 4 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், வாடகைக்கு சிறப்பு மருத்துவர்களை எடுத்துக் கொள்வதுதான் திராவிட மாடல் ஆட்சியா?.
இதன் மூலம் மருத்துவர்கள் ஈடுபாட்டோடும், அர்ப்பணிப்போடும் பணியாற்றுவதை வேண்டாம் என அரசு நினைக்கிறதா. இன்னொரு புறம் மக்கள் நம்பிக்கையோடு அரசு மருத்துவமனைகளுக்கு வர வேண்டாம் என நினைக்கின்றனரா. இல்லை தனியார் மயமாக்கும் முனைப்பில் அரசு உள்ளதா. கல்வியும், சுகாதாரமும் இரண்டு கண்கள் என தெரிவிக்கும் தமிழக முதல்வர், உடனடியாக தலையிட்டு, நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்றார் போல அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமிக்க வேண்டும். அரசு மருத்துவர்கள் உரிய ஊதியம் பெறும் வகையில் அரசாணை 354-ஐ உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.