கிங்ஸ்டன் கல்லூரியில் மீண்டும் அமலாக்கத் துறை சோதனை: பாதுகாப்பு கோரி காவல்நிலையத்தில் கடிதம்

கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள்  மீண்டும்  சோதனை
கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை
Updated on
2 min read

வேலூர்: வேலூர் தொகுதி எம்பி கதிர்ஆனந்துக்கு சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகரில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வீடு மற்றும் அவரது மகனும் வேலூர் தொகுதி எம்பியுமான கதிர் ஆனந்த்தின் அறக்கட்டளை சார்பில் காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டையில் நடத்தப்பட்டு வரும் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி மற்றும் திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் வீடு உள்ளிட்ட நான்கு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சிஆர்பிஎஃப் போலீஸ் பாதுகாப்புடன் 3-ம் தேதி காலை சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், அமைச்சர் துரைமுருகன் வீட்டில் மட்டும் 7 மணி நேரம் தாமதத்துக்குப் பிறகு திமுக பிரமுகர்கள் வன்னியராஜா, சுனில்குமார் மற்றும் வழக்கறிஞர் பாலாஜி ஆகியோர் முன்னிலையில் சோதனை தொடங்கியது. பூஞ்சோலை சீனிவாசன் உள்ளிட்ட 2 இடங்களில் நடைபெற்ற 8 மணி நேரம் சோதனையில் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் இருந்து ரூ.28 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல், அமைச்சர் துரைமுருகன் வீட்டில் சுமார் 11 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை.

அமைச்சர் வீட்டில் 3 தளங்களிலும் நடத்தப்பட்ட சோதனையில் கிடைத்த ரூ.8 லட்சம் பணம் அவர்கள் வசமே ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையில், கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் உள்ள நிர்வாக அலுவலகம் மற்றும் கெஸ்ட் ஹவுஸ் கட்டிடத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனை 3-ம் தேதி காலை தொடங்கி 44 மணி நேரத்துக்குப் பிறகு கடந்த 4-ம் தேதி நள்ளிரவு 2.30 மணிக்கு நிறைவு பெற்றது.

சோதனையின்போது கம்ப்யூட்டர் ஒன்றின் மென்பொருள் கோளாறால் அமலாக்கத்துறை அதிகாரிகளால் ஆய்வு செய்ய முடியவில்லை. பின்னர், சோதனையை முடித்துக்கொண்ட அதிகாரிகள் நள்ளிரவு 2.30 மணியவில் 8 கார்களில் புறப்பட்டுச் சென்றனர். அப்போது, அறக்கட்டளை தொடர்பான ஆவணங்கள் கம்ப்யூட்டர் ஹார்டுடிஸ்க் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

முன்னதாக, கல்லூரியில் இருந்த பெரும்தொகை ஒன்றை எஸ்பிஐ வங்கி அதிகாரிகளை வரவழைத்து துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்புடன் 3-ம் தேதி இரவு வெள்ளை நிற வேனில் எடுத்துச் செல்லப்பட்டது. இந்த தொகை அமலாக்கத்துறையின் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் குழுவினர் இன்று (ஜன.7) மீண்டும் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் சோதனை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக விசாரித்தபோது, “கல்லூரியின் நிர்வாக அலுவலக கட்டிடத்தில் இருந்த 2 அறைகளுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு சீல் வைத்துச் சென்றனர். அந்த அறைகளில் சோதனை நடத்துவதற்காக இன்று காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்துள்ளனர். மேலும், சீல் வைக்கப்பட்ட அறைகளை சோதனை நடத்த வேண்டியுள்ளதால் காவல்துறை பாதுகாப்பு கேட்டு இன்று பகல் 1 மணியளவில் காட்பாடி காவல் நிலையத்தில் கடிதம் கொடுத்துள்ளனர். சோதனை முடிந்த பிறகுதான் மற்ற விவரங்கள் தெரியவரும்.” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in