Last Updated : 04 Jul, 2018 09:58 AM

 

Published : 04 Jul 2018 09:58 AM
Last Updated : 04 Jul 2018 09:58 AM

எழும்பூர் ரயில் நிலையத்தில் சான்றிதழ்கள் திருடு போனதால் எம்பிபிஎஸ் படிக்க போராடும் ஏழை மாணவர்

எழும்பூர் ரயில் நிலையத்தில் அனைத்து சான்றிதழ்களையும் பறிகொடுத்த விருதுநகரைச் சேர்ந்த ஏழை மாணவர், மாற்று சான்றிதழ்களை பெற்று எம்பிபிஎஸ் படிக்க கடும் முயற்சி செய்து வருகிறார்.

விருதுநகர் மாவட்டம் புதுப்பட்டியைச் சேர்ந்த மாணவர் ஜி.பூபதி ராஜா. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் (எஸ்சி) சேர்ந்த ஏழை மாணவரான இவர் பிளஸ் 2 தேர்வில் 1,114 மதிப்பெண்ணும், நீட் தேர்வில் 236 மதிப்பெண்ணும் பெற்றுள்ளார். தந்தை முன்னாள் ராணுவ வீரர் என்பதால் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் பிரிவில் விண்ணப்பித்துள்ளார். கடந்த 1-ம் தேதி எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது. அன்றைய தினம் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர் பிள்ளைகள், விளையாட்டு வீரர் ஆகியோருக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு நடந்தது. அதற்கான பட்டியலில் பூபதிராஜாவின் பெயர் இடம்பெறவில்லை.

பட்டியலில் பெயர் இல்லையென்றாலும், கலந்தாய்வில் பங்கேற்றால் தனக்கு இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் தாய்மாமா கணேசனுடன் பூபதிராஜா கடந்த 1-ம் தேதி அதிகாலை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வந்துள்ளார். ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த மர்ம நபர்கள் சான்றிதழ்கள் வைத்திருந்த இவரது பையை திருடிச் சென்றுள்ளனர். அந்த பையில் தந்தை முன்னாள் ராணுவ வீரர் என்பதற்கான சான்றிதழுடன், பிளஸ்2 மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, நீட் ஹால் டிக்கெட், நீட் மதிப்பெண் அட்டை உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களும் இருந்துள்ளன.

இதுபற்றி எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்த போலீஸாரிடம் சொல்லி பூபதிராஜா அழுதுள்ளனர். பின்னர் பகல் 12.30 மணிக்கு கலந்தாய்வு நடக்கும் இடத்துக்கு சென்ற அவர்கள், அதிகாரிகளிடம் நடந்த விவரத்தை சொல்ல முயற்சி செய்தனர். ஆனால், கலந்தாய்வு முடிந்துவிட்டதாகவும், யாரையும் உள்ளே அனுமதிக்க முடியாது என்றும் காவலர்கள் தெரிவித்துவிட்டனர். கலந்தாய்வில் பங்கேற்றுவிட்டு வெளியே வந்த மாணவர்கள் சிலர் பூபதிராஜாவுக்கு ஆறுதல் கூறியதுடன் அவருக்கு மருத்துவ சீட் கிடைக்கும் என்று நம்பிக்கை அளித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து ஊருக்கு திரும்பிய பூபதிராஜா, பல இடங்களில் அலைந்து திரிந்து பிளஸ் 2 மாற்றுச் சான்றிதழ், ஆதார் அட்டை உள்ளிட்ட சிலவற்றை மட்டும் வாங்கியுள்ளார். வரும் 7-ம் தேதி நடக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான கலந்தாய்வில் எம்பிபிஎஸ் படிக்க நிச்சயம் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சென்னை வரவுள்ளார் மாணவர் பூபதிராஜா.

இதுதொடர்பாக மாணவர் பூபதிராஜாவின் தாய்மாமா கணேசன் கூறும்போது, “மிகவும் கஷ்டப்பட்டு ஒரு சில சான்றிதழ்களை மட்டும் வாங்கியிருக்கிறோம். சென்னை வந்து அதிகாரிகளிடம் உண்மை நிலவரத்தை சொல்லி பூபதிராஜாவை எப்படியாவது டாக்டராக்க வேண்டும்” என்றார்.

இதுகுறித்து சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறும்போது, “இந்த மாணவரின் நிலைமையை நினைத்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவருக்கு இடம் கிடைக்க வாய்ப்பிருந்தால், நிச்சயமாக தேவையான உதவி செய்யப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x