

மதுரை: மதுரை சிறையில் கைதிகள் தயாரிக்கும் பொருட்களுக்கான மூலப்பொருள் வாங்கியது மற்றும் அந்தப் பொருட்களை விற்பனை செய்ததில் ரூ.1.63 கோடிக்கு முறைகேடு நடைபெற்றது தொடர்பான வழக்கில் கடலூர் சிறை எஸ்பி உட்பட 4 பேர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீது தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மதுரை மத்திய சிறையில் கடந்த 2016 முதல் 2021 வரை சிறைக் கைதிகள் தயாரிக்கும் பொருட்களுக்கான மூலப்பொருட்கள் வாங்கியதிலும், உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்ததில் ரூ.1.63 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றிருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து மதுரை சிறை எஸ்பியாகவும், தற்போது கடலூர் சிறைத்துறை எஸ்பியாகவும் பணிபுரியும் ஊர்மிளா, பாளையங்கோட்டை கூடுதல் எஸ்பி எஸ்.வசந்த கண்ணன், நிர்வாக அதிகாரி எம்.தியாகராஜன் மற்றும் சிறைக்கு பொருட்கள் விநியோகம் செய்த மதுரை ஜபருல்லாகான், முகமது அன்சாரி, முகமது அலி, சென்னை சீனிவாசன் மற்றும் வெங்கடேஸ்வரி, சென்னை சாந்தி, நெல்லை சங்கரசுப்பு மற்றும் தனலெட்சுமி ஆகிய 11 பேர் மீது மதுரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி கடலூர் சிறை எஸ்பி ஊர்மிளா, சங்கரசுப்பு, சீனிவாசன், சாந்தி ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில், சிறையில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் விற்பனை தொடர்பாக முறையான ரசீது இல்லை எனக் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.
இணைய வழி ரசீது இல்லாவிட்டாலும், கைகளால் எழுதப்பட்ட ரசீதுகள் உள்ளன. மதுரை சிறையில் பணிபுரிந்தவர்கள் வேறு சிறைகளுக்கு மாறுதல் செய்யப்பட்ட பிறகே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் சோதனையின் போது சம்பந்தப்பட்ட நபர்கள் சிறையில் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.
முன்னாள் சிறை அலுவலர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மதுரை சிறை மட்டுமல்லாமல், சென்னை புழல் சிறை, பாளையங்கோட்டை, சேலம், திருச்சி, கடலூர் மத்திய சிறைகளிலும் சோதனை நடைபெற்றது.
இந்த சிறைகளில் மதுரை சிறையில் நடந்ததை விட பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ள கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மதுரை சிறையில் பணியாற்றியவர்கள் மீது மட்டும் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார். இதையடுத்து முன்ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிபதி தள்ளிவைத்தார்.